ADDED : ஜூன் 29, 2024 12:30 AM
கோவை;தமிழக பள்ளிகளில் மாணவர்கள், 'பிளாஸ்டிக்' பொருட்களை உபயோகிக்கக் கூடாது என, தமிழக பள்ளிக்கல்வி மற்றும் துவக்கப்பள்ளி இயக்குனர் வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் கூறியிருப்பதாவது::
இந்த கல்வியாண்டு முதல், பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்றவை பிளாஸ்டிக்கால் இருக்கக்கூடாது.
மாணவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கேன்சர் போன்ற பல கொடிய நோய்களை உருவாக்கக்கூடியதாக உள்ளது. அதனால் தடுத்து நிறுத்திட, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆணையிட வேண்டும்.
அனைத்து அரசு தொடக்க பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தன் சுத்தம், பள்ளி வளாகத் துாய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகளை, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.