/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின் மயானத்தில் ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் துவங்கியது மின் மயானத்தில் ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் துவங்கியது
மின் மயானத்தில் ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் துவங்கியது
மின் மயானத்தில் ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் துவங்கியது
மின் மயானத்தில் ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் துவங்கியது
ADDED : ஜூன் 03, 2024 11:17 PM
மேட்டுப்பாளையம்;காரமடை நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் மின் மயானத்தில் ஆம்புலன்ஸ் இயங்கவில்லை என கடந்த மே 25ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் துவங்கியது.
கோவை மாவட்டம் காரமடை நகராட்சி சார்பில் மேட்டுப்பாளையம் சாலையில் மின் மயானம் உள்ளது. காரமடை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.
இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அதே போல் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, கெம்மாரம்பாளையம், சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம், தேக்கம்பட்டி, காளம்பாளையம் என பல்வேறு ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
காரமடை நகர் பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகளில் மரணம் அடைவோரின் பலரது உடல் இந்த மின் மயானத்தில் எரியூட்டப்படுகின்றன.
இதற்கு கட்டணமாக ரூ.2,250ம், ஆம்புலன்ஸ் கட்டணம் நகர் பகுதியில் ரூ.750ம், பிற பகுதிகளில் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணம் குறைந்த அளவில், காரமடை நகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது.
இதனிடையே இந்த மின் மயானத்தில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் சில மாதங்களாக எப்.சி., இன்சூரன்ஸ் போன்றவைகள் புதுப்பிக்கப்படாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் பல தனியார் ஆம்புலன்ஸ்கள் இறந்தவர்களின் உடல்களை எடுத்து வர அதிக கட்டணம் வசூல் செய்தனர். இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் கடும் அவதியடைந்தனர். இது பற்றிய செய்தி 'தினமலர்' நாளிதழில் கடந்த மே 25ம் தேதி வெளியான நிலையில், செய்தியின் எதிரொலியாக மின் மயானத்தில் தற்போது ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் துவங்கியது.
இதுகுறித்து காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன் கூறுகையில், 'ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தில் திருத்தம் இருந்தது. அது சரி செய்யப்பட்டு, எப்.சி., காண்பிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆம்புலன்ஸ் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது' என்றார்.