Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓட்டு வாங்கியதும் வேலையை காட்டிய மாநகராட்சி! காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் கட்டண கொள்ளை

ஓட்டு வாங்கியதும் வேலையை காட்டிய மாநகராட்சி! காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் கட்டண கொள்ளை

ஓட்டு வாங்கியதும் வேலையை காட்டிய மாநகராட்சி! காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் கட்டண கொள்ளை

ஓட்டு வாங்கியதும் வேலையை காட்டிய மாநகராட்சி! காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் கட்டண கொள்ளை

ADDED : ஜூன் 21, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
கோவை;லோக்சபா தேர்தலில் மக்களிடம் ஓட்டு வாங்கிய பின், கோவை மாநகராட்சி நிர்வாகம், வேலையை காட்டி விட்டது. காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இரு சக்கர வாகனம் நிறுத்த, ரூ.30 பிளஸ் ரூ.30 என, ஒரு நாளைக்கு, 60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் என்றாலே... மக்களுக்கான சேவையை முன்னிறுத்தி பணிகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர் வசதி, சுகாதார வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, மழை நீர் வடிகால் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. கோவை மாநகராட்சி வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவ்வகையில், பஸ் ஸ்டாண்ட் வளாகங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி, குத்தகை அடிப்படையில் ஏலதாரருக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இருந்தாலும், மாநகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விகிதங்களையே வசூலிக்க வேண்டும்.

காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில், இதற்கு முன், ஆறு மணி நேரத்துக்கு ரூ.5, 12 மணி நேரத்துக்கு ரூ.10, ஒரு நாளைக்கு (24 மணி நேரம்) ரூ.20 என்கிற கட்டணம் அமலில் இருந்தது.

லோக்சபா தேர்தலுக்கு முன் நடந்த மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி வரி விதிப்புக்குழு பரிந்துரைப்படி, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு மணி நேரத்துக்கு, 10 ரூபாய், அதன் பின், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா, 5 ரூபாய் என, அபரிமிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருக்கிறது.

காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவண்ணாமலை, சேலம், கரூர், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நகரங்களுக்கு செல்லும் பயணிகள், தங்களது வாகனங்களை நிறுத்துகின்றனர். இரண்டு மணி நேரத்துக்குள் எந்த பயணியாலும் திரும்பி வர இயலாது. பயணம் முடிந்து திரும்பி வருவதற்கு, குறைந்த பட்சம் ஒரு நாள் அல்லது, 12 மணி நேரமாகலாம்.

ஒருவர், 12 மணி நேரம் வாகனம் நிறுத்தினால், முதல் இரண்டு மணி நேரத்துக்கு ரூ.10 எனவும், அடுத்த, 10 மணி நேரத்துக்கு, மணிக்கு ரூ.5 வீதம் ரூ.50 சேர்த்து, 60 ரூபாய் கேட்கின்றனர்.

ஒரு நாள் கழித்து (24 மணி நேரம்) வாகனம் எடுக்க வந்தால், ரூ.120 கொடுக்க வேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு இவ்வளவு கட்டணமா என வாகன ஓட்டிகள் கேட்டனர். இது, லோக்சபா தேர்தல் சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாகன நிறுத்துமிடத்தை ஏலம் எடுத்த குத்தகைதாரர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகவல், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே, கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தலில் மக்களிடம் ஓட்டு வாங்கி, வெற்றி பெற்றதை தொடர்ந்து, வாகன நிறத்துவதற்கான கட்டண உயர்வை மாநகராட்சி அமல்படுத்த அறிவுறுத்தி விட்டது. தீர்மானத்தின் அடிப்படையில் அதிகமான பணம் கேட்டால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைவர் என்பதால், வாகனம் நிறுத்த வரும்போது, டோக்கன் கொடுக்கும்போது, 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வாகனம் எடுக்க வரும்போது, 12 மணி நேரத்தை கடந்தால் மீண்டும், 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு, 60 ரூபாய் வாகனம் நிறுத்த வசூலிக்கப்படுகிறது.

சிறைத்துறையின் வாகன நிறுத்துமிடம்


காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் எதிரே சிறைத்துறையால் வாகன நிறுத்துமிடம் நடத்தப்படுகிறது. அங்கு, 12 மணி நேரத்துக்கு, 10 ரூபாய்; 12 மணி நேரத்தை கடந்தால் மேலும், 10 ரூபாய் என, ஒரு நாளைக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. ரசீது வழங்க கையடக்க 'டிஜிட்டல்' கருவி பயன்படுத்தப்படுகிறது. அதில், வாகன எண்ணை பதிவிடுகின்றனர். டோக்கன் எண், வாகன பதிவு எண், நேரம், கட்டண தொகையுடன் ரசீது வழங்கப்படுகிறது.

வாகனம் எடுக்க வரும்போது, டோக்கன் எண்ணை குறிப்பிட்டால் போதும்; 12 மணி நேரத்தை கடந்திருந்தால், அக்கருவியே கணக்கிட்டு, எத்தனை ரூபாய் கூடுதலாக வசூலிக்க வேண்டும் என கணக்கிட்டு, மற்றொரு ரசீது தருகிறது. 12 மணி நேரத்துக்குள் வந்து விட்டால் மீண்டும் பணம் கொடுக்க வேண்டியதில்லை. ஆரம்பத்தில் கொடுத்த, 10 ரூபாயே போதுமானது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

மாநகராட்சியால் பராமரிக்கப்படும் வாகன நிறுத்துமிடத்தில், மன்ற தீர்மானம் என்ற பெயரில் கட்டண கொள்ளை அடிக்கப்படுகிறது. மத்திய சிறை நிர்வாகத்தின் நடைமுறையை பின்பற்ற, மாநகராட்சி வருவாய் பிரிவினரிடம் தெரிவித்தால், அத்துறையினர் பரிசீலனை செய்யாமல், அலட்சியப்படுத்துகின்றனர்.

சொன்னோம்... கேட்கலை!

மாநகராட்சி மத்திய மண்டல தலைவி (தி.மு.க.,) மீனாவிடம் கேட்டதற்கு, ''இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தை உயர்த்த, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போதே எதிர்ப்பு தெரிவித்தோம். கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது; மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறினோம். எங்களது கருத்தை உதாசீனப்படுத்தி, நிறைவேற்றி விட்டனர். வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்பதால், கட்டணத்தை குறைத்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவோம்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us