/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை
பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை
பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை
பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை
ADDED : ஜூன் 07, 2024 11:21 PM
பெ.நா.பாளையம்;உள்ளாட்சி பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் மஞ்சப்பை ஏ.டி.எம்., இயந்திரங்களை நிறுவ ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கோவை வடக்கு பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை, குருடம்பாளையம், அசோகபுரம், நாயக்கன்பாளையம், பிளிச்சி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், பிளாஸ்டிக் தாள்கள், உறிஞ்சு குழல்கள் விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை உள்ளாட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதமும் விதிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க, அரசால் கொண்டு வரப்பட்ட மஞ்சப்பை திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தினசரி சந்தைகள் உள்ளிட்ட தேவையான இடங்களில் மஞ்சப்பை ஏ.டி.எம்., இயந்திரங்கள் நிறுவ, உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது.
இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினர் மளிகை, ஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.