ADDED : ஜூலை 19, 2024 10:59 PM
கோவை;ஒண்டிப்புதுார் அருகே பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் ஆத்திரமடைந்த பள்ளி குழந்தையின் தந்தை, நிறுவன மேற்பார்வையாளரை தாக்கினார்.
ஆர்.எஸ்.புரம், கிழக்கு பெரியசாமி ரோட்டை சேர்ந்தவர் மகாமுனி,27. தனியார் இன்ஜினியரிங் நிறுவன மேற்பார்வையாளர். நேற்று முன்தினம் மாலை, இந்நிறுவனத்தின் டிப்பர் லாரி ஒண்டிப்புதுார், ஆஞ்சநேயர் காலனி அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த பள்ளி வேன் ஒன்று திடீரென நின்றதால், டிப்பர் லாரி மோதி வேனின் பின்புறம் சேதமடைந்தது. பள்ளி வேனில் பயணம் செய்த சிறுமியின் தந்தை பத்மநாபன் மற்றும் டிப்பர் லாரி டிரைவரிடையே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அங்கு வந்த மகாமுனி, டிரைவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால், வாக்குவாதம் முற்றி மகாமுனியை, பத்மநாபன் கைகளால் தாக்கி, சட்டையை கிழித்துள்ளார். மகாமுனி சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.