/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ லஞ்சத்துக்கு தரும் நோட்டு நம்பிக்கைக்கு வேட்டு! 28 ஆண்டுகள் கழித்து திரும்ப கிடைத்த பணம் லஞ்சத்துக்கு தரும் நோட்டு நம்பிக்கைக்கு வேட்டு! 28 ஆண்டுகள் கழித்து திரும்ப கிடைத்த பணம்
லஞ்சத்துக்கு தரும் நோட்டு நம்பிக்கைக்கு வேட்டு! 28 ஆண்டுகள் கழித்து திரும்ப கிடைத்த பணம்
லஞ்சத்துக்கு தரும் நோட்டு நம்பிக்கைக்கு வேட்டு! 28 ஆண்டுகள் கழித்து திரும்ப கிடைத்த பணம்
லஞ்சத்துக்கு தரும் நோட்டு நம்பிக்கைக்கு வேட்டு! 28 ஆண்டுகள் கழித்து திரும்ப கிடைத்த பணம்
ADDED : ஜூன் 14, 2024 12:18 AM
-நமது நிருபர்-
தமிழகத்தில் லஞ்ச அதிகாரிகளைப் பிடித்துக் கொடுப்பதற்காக, பொது மக்களால் தரப்படும் பணம், வழக்கு முடிந்தும் திரும்பக் கிடைப்பதில்லை என்பதற்கு உதாரணமாக, ஒரு வழக்கில் 28 ஆண்டு கழித்து, செல்லாத நோட்டு திரும்பத் தரப்பட்டுள்ளது.
அரசுத்துறைகளில் லஞ்சத்தை ஒழிப்பதற்காகவே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை என்ற பிரிவு, காவல்துறையில் செயல்படுகிறது. லஞ்சம் கொடுக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், இந்தத் துறையை அணுகினால், ரசாயனம் தடவிய பணத்தை புகார் சொல்பவரிடம் கொடுத்து, அதை அரசு அலுவலரிடம் கொடுக்கும்போது, கையும் கையூட்டுமாகப் பிடித்து கைது செய்வது வழக்கம்.
லஞ்ச அதிகாரியைப் பிடிப்பதற்குத் தரப்படும் பணம், வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின், ஆதார உடைமையாக கோர்ட்டில் டெபாஸிட் செய்யப்படும். வழக்கு முடிந்த பின், இதை சம்பந்தப்பட்ட நபரிடம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடப்பதால், புகார் கொடுக்கும் பலரும் அதை மறந்து விடுகின்றனர்; சிலர் இறந்தும் விடுகின்றனர்.
உதாரணமாக, கோவையில், கடந்த 2001 ல், சொத்து வரி புத்தகம் போட லஞ்சம் கேட்ட மாநகராட்சி அலுவலரை, ராமசாமி என்ற புகார்தாரர், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்து கைது செய்ய வைத்தார். அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. கடந்த 2022 ல், ராமசாமி மரணமடைந்து விட்டார்.
இத்தகைய வழக்குகளில், பணம் கொடுப்பவரை புகார்தாரராக பதிவு செய்யாமல், அரசே புகார்தாரராக இருப்பதால் வழக்கின் நிலையும், பணம் கொடுத்தவருக்குத் தெரிவதில்லை.
இதனால் லஞ்ச அதிகாரியை மாட்டிவிட பணம் கொடுக்கும் தனிநபர்கள், கோர்ட்டுக்கு அலைவது, அரசு அதிகாரிகளால் பழி வாங்கப்படுவது என பல விதங்களில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். லஞ்சம் கொடுத்த தொகை பெரியதாக இருந்தால், அந்த பொருளாதார இழப்பும் அவரையே சேருகிறது. இந்த பாதிப்புகள் காரணமாக, லஞ்ச ஒழிப்புத்துறையை அணுகவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், லஞ்சமாகத் தரப்படும் பணம் திரும்பத் தருவதற்கு காலம் நிர்ணயிக்க வேண்டுமென்று, கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் சார்பில், கடந்த 2007 ல் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, லஞ்சப்பணத்துக்கு இணையான பணத்தை திரும்பக் கொடுக்க அரசு உத்தரவிட்டிருப்பதாகப் பதிலளித்தது.
அதற்குப் பின்னும் இதுவரை எந்த வழக்கிலுமே, லஞ்சப்பணம் திரும்பத் தரப்படவில்லை. இதில் உச்சக்கட்ட கொடுமையாக இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்த கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோனுக்கே, கடந்த 1996 ல் மின் வாரிய அலுவலருக்கு லஞ்சமாகக் கொடுத்த 500 ரூபாய், 28 ஆண்டுகள் கழித்துத் திரும்பக் கிடைத்துள்ளது. அதில் 4 நுாறு ரூபாய் நோட்டும், இரண்டு 50 ரூபாய் நோட்டும் தரப்பட்டுள்ளது.
அசோகச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுக்கள், இப்போது புழக்கத்திலேயே இல்லை. இவற்றை ரிசர்வ் வங்கியில் தான் கொடுத்து மாற்ற வேண்டும். இதேபோல, பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக, செல்லாததாக அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களும், லஞ்ச வழக்குகளில் முடங்கிக் கிடக்கின்றன.
கதிர்மதியோன் கூறுகையில், ''கோர்ட்டில் லஞ்சப்பணத்தைச் சமர்ப்பித்ததும் அதற்கு இணையான பணத்தை, சம்பந்தப்பட்ட நபருக்குத் தர வேண்டும். வழக்கு விபரங்களை, கோர்ட் உத்தரவை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். இணையத்திலும் வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசிடம் வைத்தோம். மனுவிலும் கோரியிருந்தோம். இப்போது வரை அதற்கு விடை தெரியவில்லை.'' என்றார்.
அரசின் நடைமுறைகள், லஞ்சத்தை ஒழிப்பதற்குப் பதிலாக, லஞ்சம் வாங்குவோரை ஊக்குவிப்பதாகவே உள்ளன என்பதே உண்மை!