/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மன்றத்தை நடத்தலாம்; மேயராக செயல்பட முடியாது! துணை மேயர் அதிகாரம் குறித்து கமிஷனர் தகவல் மன்றத்தை நடத்தலாம்; மேயராக செயல்பட முடியாது! துணை மேயர் அதிகாரம் குறித்து கமிஷனர் தகவல்
மன்றத்தை நடத்தலாம்; மேயராக செயல்பட முடியாது! துணை மேயர் அதிகாரம் குறித்து கமிஷனர் தகவல்
மன்றத்தை நடத்தலாம்; மேயராக செயல்பட முடியாது! துணை மேயர் அதிகாரம் குறித்து கமிஷனர் தகவல்
மன்றத்தை நடத்தலாம்; மேயராக செயல்பட முடியாது! துணை மேயர் அதிகாரம் குறித்து கமிஷனர் தகவல்
ADDED : ஜூலை 08, 2024 10:59 PM
கோவை:''கோவை மாநகராட்சியில் மேயர் பதவி காலியாக இருப்பதால், மாமன்றத்தை வழிநடத்த துணை மேயருக்கு அதிகாரம் இருக்கிறது; மேயராக செயல்பட முடியாது,'' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயராக இருந்த கல்பனா, உடல் நிலை மற்றும் மருத்துவ காரணங்களை கூறி, பதவியை ராஜினாமா செய்து, 3ம் தேதி (புதன்கிழமை) கடிதம் கொடுத்திருந்தார். அவரது ராஜினாமா, விக்டோரியா ஹாலில் நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாமன்ற கூட்டத்தை துணை மேயர் வெற்றிச்செல்வன், தீண்டாமை உறுதிமொழி வாசித்து, துவக்கி வைத்தார். தீர்மானத்தை அவரே வாசித்து, கவுன்சிலர்களின் ஆதரவுடன் பதிவு செய்தார்.
துணை மேயர் என்பவர், மேயருக்கு துணையாக செயல்பட வேண்டும்; மேயராக செயல்பட முடியுமா என்கிற கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:
மாமன்றத்தை துணை மேயர் வழிநடத்துவது தொடர்பாக, உள்ளாட்சி சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. துணை மேயரும் இல்லாத பட்சத்தில், கவுன்சிலர்களில் மூவரை தேர்ந்தெடுத்து கமிட்டி உருவாக்கி, மன்றம் நடத்தலாம். அத்தகைய சூழல் ஏற்பட வாய்ப்பில்லை.
மேயரின் ராஜினாமா மன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இனி, கலெக்டர் மூலமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். மேயர் பதவி காலியாக இருப்பதாக, தேர்தல் ஆணையம் அறிவிக்கும். புதியவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கும்.
இடைப்பட்ட காலத்தில் கூட்டம் நடத்த வேண்டுமெனில், மன்றத்தை மட்டும் துணை மேயர் வழிநடத்துவார். மேயராக செயல்படுவதற்கு அதிகாரமில்லை; கோப்புகளில் கையெழுத்திட முடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.