/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எதுவுமே இல்லாத 'ஏழரை' பர்சன்டேஜ் கான்ட்ராக்டர்களிடம் 87 ரோடு வேலை! * கோவையில் பல ரோடுகள் குதறிக்கிடப்பதன் பின்னணி இதுதான் எதுவுமே இல்லாத 'ஏழரை' பர்சன்டேஜ் கான்ட்ராக்டர்களிடம் 87 ரோடு வேலை! * கோவையில் பல ரோடுகள் குதறிக்கிடப்பதன் பின்னணி இதுதான்
எதுவுமே இல்லாத 'ஏழரை' பர்சன்டேஜ் கான்ட்ராக்டர்களிடம் 87 ரோடு வேலை! * கோவையில் பல ரோடுகள் குதறிக்கிடப்பதன் பின்னணி இதுதான்
எதுவுமே இல்லாத 'ஏழரை' பர்சன்டேஜ் கான்ட்ராக்டர்களிடம் 87 ரோடு வேலை! * கோவையில் பல ரோடுகள் குதறிக்கிடப்பதன் பின்னணி இதுதான்
எதுவுமே இல்லாத 'ஏழரை' பர்சன்டேஜ் கான்ட்ராக்டர்களிடம் 87 ரோடு வேலை! * கோவையில் பல ரோடுகள் குதறிக்கிடப்பதன் பின்னணி இதுதான்
ADDED : ஜூலை 20, 2024 11:56 PM

-நமது சிறப்பு நிருபர்-
கோவையில், காண்ட்ராக்ட் பணிகளை எடுத்துச் செய்தது தொடர்பான புகார் நிரூபிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை இன்ஜினியர்கள் கூண்டோடு அனைவரும் மாற்றப்பட்ட பின்னும், அந்த பணிகளுக்கு மறு டெண்டர் விடப்படவில்லை. ரோடு வேலைகளைச் செய்ய முடியாத காண்ட்ராக்டர்கள் அந்தப் பணியைச் செய்யாததால், ரோடுகள் அனைத்தும் குதறிக் கிடக்கின்றன.
தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறையால் விடப்படும் டெண்டர் பணிகளில், ஆளும்கட்சியினர் மற்றும் துறை இன்ஜினியர்களால் கமிஷன் வாங்கப்படுவது வழக்கம். இது ஆட்சிக்கேற்ப கொஞ்சம் கூடும் அல்லது குறையும். ஆனால் கோவையில் சமீபகாலமாக இந்தத் துறையின் இன்ஜினியர்கள் நுாதனமான முறைகேட்டைச் செய்து, கோடிகளில் சம்பாதித்து வந்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.
நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவு சார்பில்தான், ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரோடு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் 20 லட்ச ரூபாய்க்கு மேல் ஒரு பணிக்கு டெண்டர் விடுவதாக இருந்தால், கோட்டத்தின் சூப்பரிண்டெண்ட் இன்ஜினியர்தான் டெண்டர் விட்டு, அதற்கான ஒப்பந்தமும் போட முடியும்.
ஆனால் 15 லட்ச ரூபாய்க்குக் குறைவான மதிப்பிலான பணியாக இருந்தால், கோட்டப் பொறியாளரே அதை டெண்டர் விடலாம். இந்த விதிமுறையைப் பயன்படுத்தி, ஒரு ரோட்டில் மூன்று கி.மீ., சீரமைக்க வேண்டியதை, ரூ.15 லட்சத்துக்குள் டெண்டர் மதிப்பு வருவதற்கேற்ப 200 மீட்டர், 300 மீட்டர் என்று தனித்தனியாக பிரித்து (ரீச்), டெண்டர் விட்டுள்ளனர்.
இவற்றில் பெரும்பாலான பணிகளை, துறையிலுள்ள இன்ஜினியர்களே யாராவது ஒரு சிறிய காண்ட்ராக்டர்கள் பெயரில் டெண்டர் எடுத்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு ஐந்து சதவீதத் தொகையை மட்டும் கொடுத்துள்ளனர். மொத்தத் தொகையில், துறையின் மேலிடம், மேலதிகாரிகளுக்கு 30 சதவீதம் வரை கமிஷன் கொடுத்து விட்டு, மீதித் தொகையில் பெயரளவுக்குப் பணிகளைச் செய்துள்ளனர்.
அதிலும் பல 'ரீச்'களில் சீரமைப்புப் பணிகளே செய்யாமல் பணத்தை எடுத்துள்ளனர். பணி நடந்தாலும், நடக்காவிட்டாலும் பில் போட்டு, காண்ட்ராக்டர்கள் பெயரில் தொகை சென்றதும், அதை எடுத்து அவர்கள் இன்ஜினியரிடம் கொடுத்து விடுவார்கள். ஏற்கனவே வாங்கிய ஐந்து சதவீதம் தவிர்த்து, ஆறு மாதங்கள் கழித்து, 'வித் ஹெல்டு' என்ற பெயரில் இரண்டரை சதவீதத் தொகை கிடைக்கும்.
ஆக மொத்தத்தில் எந்த வேலையும் செய்யாமலே, டெண்டர் தொகையில் ஏழரை சதவீதம் இவர்களுக்குக் கிடைத்து விடும். இப்படித்தான் கோவையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை இன்ஜினியர்களே எடுத்துச் செய்து வந்துள்ளனர். சமீபத்தில், ரூ.11 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 87 ரோடு சீரமைப்புப் பணிகளிலும் இதே முறைகேடுதான் நடந்துள்ளது.
கடந்த மே 15 அன்று, இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டபோது தான், கோவை கோட்டப் பொறியாளர், பிப்., 14 என்று முன் தேதியிட்டு, இந்த நோட்டீஸ்களை வெளியிட்டது தெரியவந்தது. இந்த பணிகள் அனைத்துமே, உரிய தளவாடங்கள், உபகரணங்கள், தொழிலாளர்கள் மற்றும் வாகனங்கள் உள்ள காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்து, கோயம்புத்துார் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில், துறையின் செயலாளருக்கு புகார் சென்றது. அதுபற்றி நமது நாளிதழில், 'காண்ட்ராக்டர்களாக மாறிய ஹைவேஸ் அதிகாரிகள்' என்ற தலைப்பில், ஜூன் 2 அன்று விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, அமைச்சர் வேலு உத்தரவின்பேரில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், கோவை கோட்டத்தில் இருந்த கோட்டப் பொறியாளர் உட்பட அனைத்து உதவி கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். ஆனால் முறைகேடு நடந்தது தெரிந்தும், அந்த 87 பணிகளுக்கும் மறு டெண்டர் விடப்படவில்லை. மாறாக, அதே ஒப்பந்தங்களில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்போது இந்தப் பணிகளை எடுத்த இன்ஜினியர்கள் இல்லாத நிலையில், எந்த உபகரணமும், வசதியும் இல்லாத காண்ட்ராக்டர்கள் பெயர்களில்தான் ஒப்பந்தங்கள் உள்ளன. அவர்களில் பெரும்பாலானவர்கள், இந்தப் பணியை மேற்கொள்வதற்கான தளவாடங்கள், வாகனங்கள் எதுவுமே இல்லாத, பெயரளவிலான காணட்ராக்டர்கள் என்பதால், இந்தப் பணிகளைச் செய்ய முடியவில்லை.
இதனால் நகருக்குள் உள்ள பெரும்பாலான ரோடுகள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர்த் திட்டப் பணிகளுக்குப் பின், சீரமைக்கப்படாமல் கந்தலாகிக் கிடக்கின்றன. தற்போது பெய்து வரும் மழையில், இந்த ரோடுகள் இன்னும் படுமோசமாகியுள்ளன. குறிப்பாக, பாலக்காடு ரோடு, குறிச்சி சாரதா மில் ரோடு போன்றவற்றின் நிலை, மிகமிக மோசமாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது.
பாலக்காடு ரோட்டில் 23 ரீச்'களாகவும், சாரதா மில் ரோட்டில் ஆறு 'ரீச்'களாகவும் பிரித்து டெண்டர் விடப்பட்டுள்ளன. பெயரளவிலான காண்ட்ராக்டர்கள், சீரமைப்புப் பணிகளைச் செய்வதற்கு, இன்னும் எத்தனை மாதங்களாகும் என்று தெரியவில்லை. மறு டெண்டர் விட்டு, ரோடு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாத வரை, அரசுக்குதான் மக்களிடம் அவப்பெயர் கிடைத்துக் கொண்டிருக்கும்.
இதுகுறித்து கருத்துக் கேட்க, நெடுஞ்சாலைத்துறை கோவை சூப்பரிண்டெண்ட் இன்ஜினியர் ரமேஷை தொடர்பு கொண்டபோது, வழக்கம் போல அவரிடம் பதில் பெறவே முடியவில்லை.
ரோடுகளே தெரியாத இன்ஜினியர்கள்!
தடுமாறும் கோவை நெடுஞ்சாலைத்துறை
கோவையிலிருந்து கூண்டோடு இன்ஜினியர்களை மாற்றிவிட்டு, சென்னை, பெரம்பலுார் போன்ற பகுதிகளிலிருந்து கோவையைப் பற்றி எதுவுமே தெரியாத இன்ஜினியர்களை இங்கு கொண்டு வந்துள்ளனர். வழக்கமாக, உதவிக் கோட்டப் பொறியாளர் புதிதாக வந்தால், அவருக்குத் தெரியாத ரோடுகளை, உதவிப் பொறியாளர் சொல்லிக் கொடுப்பார். உதவிப் பொறியாளருக்கு, ரோடு தெரியாவிட்டால், உதவி கோட்டப் பொறியாளர் சொல்லிக் கொடுப்பார்.
ஆனால் இப்போதுள்ள கோட்டப் பொறியாளர் துவங்கி, கீழேயிருக்கும் இன்ஜினியர்கள் யாருக்குமே, கோவையிலுள்ள எந்த ரோட்டைப் பற்றியும் தெரியவில்லை. அதே போல, காண்ட்ராக்டர்கள் யாரையுமே தெரியாததால், எந்தப் பணிக்கு யாரை அழைப்பது என்றும் தெரியாமல் திணறுகின்றனர். இதனால் நெடுஞ்சாலைத்துறையின் கோவை பிரிவே ஒட்டு மொத்தமாக தடுமாறி வருகிறது.