/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாயா! / ஆனாலும் இது ஓவர் என்கின்றனர் கோவை மக்கள்! கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாயா! / ஆனாலும் இது ஓவர் என்கின்றனர் கோவை மக்கள்!
கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாயா! / ஆனாலும் இது ஓவர் என்கின்றனர் கோவை மக்கள்!
கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாயா! / ஆனாலும் இது ஓவர் என்கின்றனர் கோவை மக்கள்!
கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாயா! / ஆனாலும் இது ஓவர் என்கின்றனர் கோவை மக்கள்!
ADDED : ஜூலை 06, 2024 08:07 PM

கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம்; இவ்வளவு தொகை எப்படி வழங்கலாம் என, கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதை மறுபரிசீலனை செய்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு, அரசு தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, கோவை மக்கள் சிலரிடம் பேசினோம்...!
'தடுக்க நடவடிக்கை தேவை'
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கினாலும், அவர்களது குடும்ப சூழ்நிலை மோசமாக தான் செல்லும். ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் கொடுத்தாலும், ஒரு தந்தை இருந்து செய்ய கூடிய இடத்தில் இருந்து, கிடைக்க கூடியது எதுவும் கிடைக்காது. ஆண் குழந்தைகள், சிறு வயதிலேயே பொறுப்பை சுமக்க நேரிடும். பலியானவர்களின் குடும்பத்தை நினைக்கும் அரசு, அவர்கள் பலியாகாமல் தடுக்க, என்ன செய்ய வேண்டும் என சிந்திக்கலாம்.
- வெங்கடேஷ்,
ஐ.டி.,ஊழியர், வடவள்ளி
'குடிப்பதை ஊக்குவிக்கிறது'
அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து சரியானது தான். குடிப்பது என்பதே தவறானது. அதில் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணம் தருவது என்பது மிகவும் தவறானது. இது, திருட்டை ஊக்குவிப்பது போன்று உள்ளது. கள்ளச்சாராயத்தை குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர், மீண்டும் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தவறு யாரிடம் உள்ளது என்பதை, அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
- சாந்திராஜ்,
தனியார் ஊழியர், போத்தனுார்
'அரசு இப்படியே விடக்கூடாது'
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலியானவர்கள் கூலி தொழிலாளிகள். நிலத்தை நம்பி பிழைப்பு நடத்தக் கூடியவர்கள். அவர்களது குடும்பத்தை கருத்தில் கொண்டு தான் அரசு ரூ.10 லட்சத்தை நிவாரணமாக கொடுத்துள்ளது. குழந்தைகளின் எதிர்காலம், கல்விக்காக பணத்தை அரசு கொடுத்துள்ளது. அதற்காக அரசு இப்படியே விட்டு விட கூடாது ஆய்வு செய்ய வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இனி இந்த சம்பவம் நடக்கக்கூடாது.
- பழனிசாமி
விவசாயி, சூலுார்
'மக்கள் வரிப்பணம் வேண்டாம்'
பொதுமக்கள் அனைவரது கருத்தும், நிவாரணத்தை மக்களின் வரி பணத்தில் இருந்து கொடுக்க வேண்டாம் என்பது தான். கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை முடக்குவது போல, சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். பல குடும்பங்களும் இது போன்ற சம்பவங்களில் இருந்து தப்பும்.
- சூரியா,
அலுவலக பணியாளர், போத்தனுார்.
'கள்ளச்சாராயம் குடித்தால் பணமா'
சிவகாசி, அருப்புக்கோட்டை, அரியலுார் ஆகிய இடங்களில் பட்டாசு தொழிலை நம்பி, நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அங்கு அடிக்கடி பட்டாசு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. அப்போது அரசு வழங்கும் நிவாரணம், ரூ.2 அல்லது, 3 லட்சங்களை தாண்டுவது இல்லை. அரசின் விபத்து நிவாரண நிதி ரூ.ஒரு லட்சம் தான். ஆனால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ரூ.10 லட்சம் என்பது அதிகம் தான். உயர் நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன்.
- புஷ்பானந்தம்
வக்கீல், இடையர்பாளையம்