Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின் மீட்டர், கம்பம் வழங்க வாரியம் அலைக்கழிப்பு வளசரவாக்கம் கவுன்சிலர்கள் கொதிப்பு

மின் மீட்டர், கம்பம் வழங்க வாரியம் அலைக்கழிப்பு வளசரவாக்கம் கவுன்சிலர்கள் கொதிப்பு

மின் மீட்டர், கம்பம் வழங்க வாரியம் அலைக்கழிப்பு வளசரவாக்கம் கவுன்சிலர்கள் கொதிப்பு

மின் மீட்டர், கம்பம் வழங்க வாரியம் அலைக்கழிப்பு வளசரவாக்கம் கவுன்சிலர்கள் கொதிப்பு

ADDED : மார் 19, 2025 12:30 AM


Google News
வளசரவாக்கம்,வளசரவாக்கம் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் ராஜன் தலைமையில், வளசரவாக்கத்தில் நேற்று நடந்தது.

மண்டல உதவி கமிஷனர் உமாபதி, செயற்பொறியாளர் பானுகுமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்று, நிறைவேற்றப்பட்ட 22 தீர்மானங்கள் குறித்தும், வார்டின் அடிப்படை தேவைகள் குறித்தும் பேசினர்.

கவுன்சிலர்கள் பேசியதாவது:

ஸ்டாலின், 144வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: வார்டில் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. வாரத்திற்கு இரு முறை தண்ணீர் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மதுரவாயல் பெருமாள் தெருவில், கூவம் ஆற்றங்கரையோரம் நீர்வளத்துறை நிலையம் உள்ளது. அங்கு, அப்பகுதி மக்களுக்கு கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் வாரிய அதிகாரிகள்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீர் வரத்து குறைந்ததால், தண்ணீர் தட்டுப்பாடு இரு நாட்களுக்கு இருந்தது. தற்போது, எந்த பிரச்னையும் இன்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ரமணி மாதவன், 147வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர்: வார்டில் உள்ள விளையாட்டு திடல் மற்றும் பூங்காக்களை முறையாக பராமரிக்க, ஆட்கள் நியமிக்க வேண்டும்.

அதேபோல், வார்டில் உள்ள 'அம்மா' உணவகத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் பழுதடைந்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதை சீர் செய்ய வேண்டும்.

கிரிதரன், 148வது வார்டு, அ.ம.மு.க., கவுன்சிலர்: வாரியம் சார்பில் குடிநீர் இணைப்பு வழங்க 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தியுள்ளது. இதனால், குடிநீர் இணைப்புகள் அளிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், 148வது வார்டில் உள்ள பாலவிநாயகர் நகரை, மாநகராட்சி வருவாய் துறையினர் தவறுதலாக 149வது வார்டில் சேர்ந்துள்ளனர். இதனால், 140 குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.

நெற்குன்றத்தில் 80 மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை மாற்றி அமைப்பதில் மின் வாரியம் சுணக்கம் காட்டி வருகிறது. மாற்றப்பட்ட கம்பங்களில், மின் கம்பி மாற்றி அமைக்காமல் உள்ளனர். இவற்றை விரைந்து முடிக்க வேண்டும்.

சத்யநாதன், 145வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர்: நெற்குன்றத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. டாக்டர் இல்லாததால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

நெற்குன்றம் 145வது வார்டில், பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்படாமல் உள்ளன. மின் மீட்டருக்கு விண்ணப்பித்து பல மாதங்கள் கடந்தும், மீட்டர் வழங்காமல் உள்ளனர்.

அனைத்து ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பித்தும், உயர் அதிகாரிகளை நேரில் பார்த்தால் தான் மின் இணைப்பு வழங்கப்படும் என, மின் வாரிய ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் கூறுகின்றனர்.

நெற்குன்றத்தில் சாலையோரம் கட்டப்பட்டு வந்த பொது கழிப்பறை பணி, தனி நபர் எதிர்ப்பால் மாநகராட்சியால் நிறுத்தப்பட்டது. அதே நபர் 30 அடி சாலையை ஆக்கிரமித்துள்ளார்.

இதுகுறித்து நான் புகார் அளித்தும், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கவில்லை. இதில், உயர் மாநகராட்சி அதிகாரிகள் தலையீடு இருப்பதால் பயப்படுகின்றனர்.

ராஜு, 155வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர்: ராமாபுரம் கே.பி., நகர் பிரதான சாலை, பழைய மழைநீர் வடிகாலை உடைத்து, புதிதாக கட்டும் பணி நடக்கிறது.

இப்பணிக்காக பள்ளம் தோண்டும்போது, குடிநீர் குழாய் மற்றும் தெரு மின் விளக்கு கேபிள்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீர் செய்ய வேண்டும்.

அதேபோல், வார்டில் உள்ள பூங்காக்களை பராமரிக்க ஆட்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் விவாதித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us