/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால தடத்தில் ஆதம்பாக்கம் வரை ரயில் இயக்க வலியுறுத்தல் வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால தடத்தில் ஆதம்பாக்கம் வரை ரயில் இயக்க வலியுறுத்தல்
வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால தடத்தில் ஆதம்பாக்கம் வரை ரயில் இயக்க வலியுறுத்தல்
வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால தடத்தில் ஆதம்பாக்கம் வரை ரயில் இயக்க வலியுறுத்தல்
வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால தடத்தில் ஆதம்பாக்கம் வரை ரயில் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 10, 2025 12:37 AM

வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக, பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ., நீளத்திற்கு மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள், பல ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டன.
இதில், வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ரயில் நிலையம், ரயில் பாதை கட்டுமான பணிகள், 4.5 கி.மீ., துாரத்திற்கு முடிவடைந்தன.
ஆதம்பாக்கம் - -பரங்கிமலை இடையேயான மேம்பால ரயில் திட்டம், நில ஆர்ஜிதம் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. அப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் அப்பகுதி முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டே வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை மேம்பால ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராதவிதமாக கடந்த ஆண்டு துவக்கத்தில் நங்கநல்லுார், தில்லை கங்காநகர் பகுதியில் மேம்பால துாண் ஒன்று பாரம் தாங்காமல் உடைந்து கீழே விழுந்ததால், பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.ஐ.டி., தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியோடு பணிகள் முடிக்கப்பட்டன.
விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, ஒரு சில மாதங்களில் ரயில் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மெட்ரோ ரயில் திட்ட குறுக்கீடு காரணமாக, வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான மேம்பால ரயில் சேவை இயக்குவதில், மேலும் பல மாதங்கள் தாமதம் ஆகலாம் என, கூறப்படுகிறது.
புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் முடிந்த நிலையில், அப்பகுதி பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும், அங்குள்ள விலை உயர்ந்த பொருட்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
எனவே, மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடியும் வரை காத்திருக்காமல், வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது:
வேளச்சேரி - -பரங்கிமலை மேம்பால ரயில் திட்டப் பணிகள் தாமப்படுவதால், பணிகள் முடிந்துள்ள ஆதம்பாக்கம் வரை ரயில் சேவை இயக்குவது குறித்து, ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், குறைந்த கி.மீ., தொலைவில் உள்ள ரயில் நிலையங்களுக்கு ரயில்களை இயக்க, இதுவரை அனுமதி அளிக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் கூறியுள்ளன.
- -நமது நிருபர் --