Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருப்பதி திருக்குடை ஊர்வலம் பக்தர்கள் தரிசனத்துடன் துவக்கம்

திருப்பதி திருக்குடை ஊர்வலம் பக்தர்கள் தரிசனத்துடன் துவக்கம்

திருப்பதி திருக்குடை ஊர்வலம் பக்தர்கள் தரிசனத்துடன் துவக்கம்

திருப்பதி திருக்குடை ஊர்வலம் பக்தர்கள் தரிசனத்துடன் துவக்கம்

ADDED : செப் 23, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
சென்னை:ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம், சென்னையில் நேற்று கோலாகலமாக துவங்கியது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாத பிரம்மோத்சவத்தின்போது, ஏழுமலையான் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில், வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், 21ம் ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் துவக்க விழா, சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் நேற்று நடந்தது.

ஹிந்து தர்மார்த்த ஸமிதி, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வரவேற்புரையாற்றி பேசியதாவது:

திருப்பதி பிரமோத்சவம் கருட சேவையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும், அழகிய 11 திருக்குடைகள், சென்னையில் இருந்து, ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பாக, சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

இந்நிகழ்ச்சி, 2000ம் ஆண்டில் நிறத்தப்பட்டது. பின், திருப்பதி தேவஸ்தானத்தை அணுகி, உரிய அனுமதி பெற்று, தற்போது 21ம் ஆண்டாக நடத்தி வருகிறோம்.

தென்மாநிலங்களி லேயே, மிகவும் பிரமாண்டமான நிகழ்ச்சியாக, திருப்பதி திருக்குடை நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.

இந்த திருக்குடைகள், சாதாரண குடை கிடையாது; பிராத்தனை குடை. பெருமாளே இந்த குடை வழியே நம்மிடம் இருக்கிறார். ஐந்து நாட்கள் திருக்குடை ஊர்வலத்தில், 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வர்.

இந்த பிரார்த்தனைகளை எல்லாம், பெருமாளின் திருவடிகளில், நாங்கள் சமர்ப்பணம் செய்கிறோம்.

இந்த திருக்குடைக்கு, பலவிதமான அச்சுறுத்தல்களும், இடைஞ்சல்களும் வந்தன. பயங்கரவாத அச்சுறுத்தல்கூட வந்தது. ஆனால், அவற்றை எல்லாம் கடந்து, அந்த இறைவன் நம்மிடம் இருந்து, இதை நடத்திக் கொண்டிருக்கிறார்.

திருக்குடை ஊர்வலத்தில், யானை கவுனியை தாண்டுதல் நிகழ்ச்சி, மிகப்பெரியது. குடை வாங்கிக் கொண்டு வரும் பெருமாளை, எப்படியாவது பிடிக்க வேண்டும் என, குபேரன் அங்கு காத்திருப்பாராம்.

அதனால், யானை கவுனி பகுதியில் அனைவரும், திருக்குடையுடன் ஓடுவர். அப்படி, காலம், காலமாக இந்த வைபவம் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் ஜி சிறப்புரையாற்றினார். விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலர் கிரிஜா சேஷாத்திரி வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து, 11 திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உடுப்பி பலிமார் மடம் பீடாதிபதி, ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள், திருக்குடை ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பக்தர்கள் 'கோவிந்தா... கோவிந்தா...' என பரவசத்துடன், திருக்குடைகளை தரிசனம் செய்தனர்.

திருக்குடைகள், பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4:00 மணிக்கு கவுனி தாண்டின. தொடர்ந்து நேற்றிரவு, ஓட்டேரி பாலம் வழியாக அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலை சென்றடைந்தது.

இன்று, ஐ.சி.எப்., - ஜி.கே.எம்., காலனி, பெரம்பூர் வழியாக, வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவில் சென்றடைகிறது.

செப்., 26ல் பத்மாவதி தாயாருக்கு இரண்டு திருக்குடைகள் சமர்பிக்கப்பட்ட பின், செப்., 27ல் திருமலை திருப்பதியில் திருக்குடைகள் தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பணம் செய்யப்பட உள்ளன.

'தமிழக மக்களை திருக்குடைகள் காக்கும்'

விழாவில், கர்நாடக மாநிலம் உடுப்பி பாலிமர் மடத்தின் பீடாதிபதி, ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள், பக்தர்களுக்கு அளித்த ஆசியுரை:

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜீவ நதியான காவிரி, இரண்டு மாநிலங்களையும் இணைக்கிறது. ஸ்ரீனிவாச பெருமாள் வெளியே வர வேண்டும் என்றால் குடை மிக முக்கியம்.

அந்த திருக்குடையை கொடுக்கும் பாக்கியத்தை, தமிழகத்துக்கு அவர் கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் கோடிக்கணக்கான பேர் இருந்தாலும், திருக்குடையை வழங்கும் பாக்கியத்தை, ஆர்.ஆர்.கோபால்ஜிக்கு, ஏழுமலையான் வழங்கி உள்ளார். இந்த மிகப்பெரிய வைபவத்தில், நாங்கள் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மழை, வெயில் ஆகியவற்றில் இருந்து, நம்மை காக்க, ஏழுமலையானுக்கு, திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

கோவர்தன மலையை, கிருஷ்ணன் எப்படி தன் சுண்டுவிரலில் துாக்கி மக்களை காத்தாரோ, அதேபோல், தமிழக மக்களை இந்த திருக்குடைகள் காக்கும்.

மற்ற தர்மங்களை காக்க, பல்வேறு அமைப்புகள் உள்ளன. ஆனால், சனாதன ஹிந்து தர்மத்தை காக்க, இதுபோன்ற அமைப்புகள் மிக முக்கியம்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us