Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாணவ - மாணவியரை பரவசத்தில் ஆழ்த்தியது 'சென்னை வாசிக்கிறது' நிகழ்ச்சியில் அதிர்ந்த அரங்கம்

மாணவ - மாணவியரை பரவசத்தில் ஆழ்த்தியது 'சென்னை வாசிக்கிறது' நிகழ்ச்சியில் அதிர்ந்த அரங்கம்

மாணவ - மாணவியரை பரவசத்தில் ஆழ்த்தியது 'சென்னை வாசிக்கிறது' நிகழ்ச்சியில் அதிர்ந்த அரங்கம்

மாணவ - மாணவியரை பரவசத்தில் ஆழ்த்தியது 'சென்னை வாசிக்கிறது' நிகழ்ச்சியில் அதிர்ந்த அரங்கம்

ADDED : ஜன 13, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
'பபாசி' எனும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், மாணவ - மாணவியரிடையே வாசிப்புப் பழக்கத்தை துாண்டும்விதமாக, நந்தனம் புத்தகக் காட்சியில், 'சென்னை வாசிக்கிறது' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், 25 பள்ளிகளிலிருந்து, 4,200 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் புத்தகம் தரப்பட்டு, 5 நிமிடங்கள் சத்தம் போட்டு வாசிக்கும்படி 'பபாசி' நிர்வாகிகள் கூறினர். அவர்கள் அவ்வாறு வாசிக்கவும், அரங்கமே வாசிப்பின் ஒலியில் அதிர்ந்தது.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேச்சாளர் சுஜித்குமார் கூறியதாவது:

உலக அளவில், ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு 270 நிமிடங்கள் மொபைல் போன் பார்க்கின்றனர். இந்தியாவில் இது, 450 நிமிடங்களாக உள்ளது.

பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, கல்வி போதிக்கும் ஆசிரியர்களும், காலை எழுந்தவுடன் மொபைல் போனைதான் முதலில் பார்க்கின்றனர். இரவு உறங்கும் முன்னும், மொபைல் போனை பார்த்துவிட்டே செல்கின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும்.

வாசிப்பின் முக்கியத்துவத்தை பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். யார் வீட்டில் அதிக புத்தகங்கள் உள்ளதோ, அவரே உண்மையில் பணக்காரர்.

நடிகை ரோகிணி பேசியதாவது:

இயற்கையின் படைப்புகள் அனைத்தும் யாருடைய கட்டளைகளும் இன்றி, அதனதன் வேலையை எவ்வித பிசிறும் இல்லாமல், முறையாகச் செய்கின்றன. ஏனென்றால், இயற்கையின் ஒவ்வொரு படைப்பும், மற்ற படைப்புகளின் நலன் சார்ந்து இயங்குகிறது. அன்பு இருந்தால் மட்டுமே, மற்றவர் நலன் சார்ந்து இயங்க முடியும்.

வாசிப்பே அன்பை வளர்க்கும் என்பதால், மாணவப் பருவத்திலேயே வாசிப்பை பழக வேண்டும். ஒருவரின் திறமையை வளரச் செய்வதற்கு பாடப் புத்தகங்கள் மட்டும் போதாது. மற்ற புத்தகங்களும் வாசிக்க வேண்டும்.

மேயர் பிரியா பேசியதாவது:

மாணவப் பருவத்தில் விதவிதமான வாசிப்பு இருந்தால், பல்துறை சார்ந்து அறிவு மேம்படும். மாணவர்கள், தினமும் ஒரு மணி நேரமாவது மற்ற புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

முன்னாள் நீதிபதி பிரகாஷ் பேசியதாவது:

விவேகானந்தர் பிறந்த நாளான இன்று, பள்ளி மாணவர்களை வைத்து இந்த நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள மாணவ - மாணவியர், விவேகானந்தர் போன்று வரவேண்டும். மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பும் அவசியம்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us