/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அடையாறின் குறுக்கே ரூ.360 கோடியில் மேம்பால திட்டம் மறந்தே போச்சு! ராணுவ நிலம், நிதி பிரச்னையால் ஏழாண்டாக முடக்கம் அடையாறின் குறுக்கே ரூ.360 கோடியில் மேம்பால திட்டம் மறந்தே போச்சு! ராணுவ நிலம், நிதி பிரச்னையால் ஏழாண்டாக முடக்கம்
அடையாறின் குறுக்கே ரூ.360 கோடியில் மேம்பால திட்டம் மறந்தே போச்சு! ராணுவ நிலம், நிதி பிரச்னையால் ஏழாண்டாக முடக்கம்
அடையாறின் குறுக்கே ரூ.360 கோடியில் மேம்பால திட்டம் மறந்தே போச்சு! ராணுவ நிலம், நிதி பிரச்னையால் ஏழாண்டாக முடக்கம்
அடையாறின் குறுக்கே ரூ.360 கோடியில் மேம்பால திட்டம் மறந்தே போச்சு! ராணுவ நிலம், நிதி பிரச்னையால் ஏழாண்டாக முடக்கம்
ADDED : ஜூன் 03, 2025 11:42 PM

நெசப்பாக்கத்தையும், நந்தம்பாக்கத்தையும் இணைக்கும் வகையில், அடையாறின் குறுக்கே, 360 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை, சென்னை மாநகராட்சி அறிவித்து ஏழு ஆண்டுகளாகிவிட்டது. ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை பெறுதல் மற்றும் நிதி சிக்கலால் அறிவிப்போடு திட்டம் முடங்கிவிட்டது; மாநகராட்சியும் திட்டத்தை மறந்து விட்டது.
அடையாறு ஆறு, நந்தம்பாக்கம் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, எம்.ஜி.ஆர்., நகர், நெசப்பாக்கம் ஆகிய பகுதிகளை பிரிக்கிறது.
நெசப்பாக்கத்தில் இருந்து நந்தம்பாக்கம், மணப்பாக்கம் செல்லும் வாகனங்கள், நெசப்பாக்கம் இணைப்பு சாலை, ஏரிக்கரை சாலை, காமராஜர் சாலை, ராமாபுரம், திருவள்ளுவர் சாலை மற்றும் எம்.ஜி.ஆர்., தோட்டம் வழியாக செல்கின்றன.
இதனால், ராமாபுரம் மற்றும் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில், வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை நீடிக்கிறது.
இதையடுத்து, நெசப்பாக்கத்தில் இருந்து நந்தம்பாக்கம் செல்லும் அடையாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டது.
இணைப்பு சாலை
அத்துடன், 2017ம் ஆண்டு நெசப்பாக்கம், அண்ணா பிரதான சாலை மற்றும் ஏரிக்கரை சாலையை இணைக்கும் வகையில், 300 மீட்டர் நீளம், 60 அடி அகலத்திற்கு, 2.41 கோடி ரூபாய் செலவில், புதிய இணைப்பு சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
தொடர்ந்து, இந்த இணைப்பு சாலையில் இருந்து செல்லும் ஏரிக்கரை சாலை, காணு நகர் பிரதான சாலை ஆகியவற்றை, 60 அடி அகலத்திற்கு விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது.
பின், காணு நகர், 12வது தெருவில் உள்ள காலி இடத்தில் இருந்து, அடையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மேம்பாலத்தின் மறுபுறம் உள்ள பர்மா நகர் எம்.இ.எஸ்., சாலை, ராணுவ நிலம் வழியாக, நந்தம்பாக்கத்திற்கு செல்ல பாதை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
இத்திட்டம் குறித்து, 2018ல் அப்பகுதிவாசிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தை, மாநகராட்சி அதிகாரிகள் நடத்தினர். இந்த மேம்பால பணிக்கு, உத்தேச மதிப்பீடாக, 360 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதுகுறித்து, நம் நாளிதழில் 2018ம் ஆண்டு செய்தி வெளியானது.
இத்திட்டம், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் விளைவிக்காத வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளதாகவும், ஆறு மாதங்களில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கப்படும் எனவும், மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்தனர்.
ஆனால், ஏழு ஆண்டுகள் கடந்தும், இன்னும் மேம்பால பணிகள் துவங்கும் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இதனால், வானக ஓட்டிகள் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அப்படி ஒரு திட்டம் அறிவித்ததையே மாநகராட்சி மறந்துபோய் விட்டது.
சிக்கல் ஏன்?
மேம்பால கட்டுமான பணிக்கு, நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான நிலம், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், 'பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் தேவை.
இந்த இரு துறைகளிடம் அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல் மற்றும் நிதி பற்றாக்குறையால், இந்த மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்திருந்தால், ராமாபுரம், நெசப்பாக்கம் மற்றும் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நிலவும் நெரிசலுக்கு நிரந்த தீர்வு கிடைத்திருக்கும்.
இனியாவது இந்த திட்டத்தை செயல்படுத்த அரசும், மாநகராட்சியும் கவனம் செலுத்த வேண்டும்.
- நமது நிருபர் -