/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்
பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்
பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்
பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்
ADDED : ஜூன் 03, 2025 12:33 AM
சென்னை, பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்டமாக, 116 கி.மீ., துாரத்துக்கு மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் - சோழிங்கநல்லுார் வரை, பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
அனைத்து பணிகளையும் வரும், 2028ம் ஆண்டிற்குள் முடிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, புதியதாக பரந்துாரில் அமைய உள்ள விமான நிலையத்தை இணைக்கும் வகையில், புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்து.
இது, இரண்டாம் கட்டத்தில் நடக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தில், பரந்துார் வரை, 53 கி.மீ., திட்டத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த திட்ட அறிக்கை, இந்தாண்டு மார்ச் 12ல், தமிழக அரசிடம், மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்பித்தது. இந்த திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, நேற்று அரசாணை வெளியிட்டது.
முதல்கட்டமாக, மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன், பூந்தமல்லி - சுங்கவார்சத்திரம் வரை, 27.9 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்டம், 8,779 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் நடக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை அடுத்து, விமான நிலையம் - கிளாம்பாக்கம், பூந்தமல்லி - பரந்துார், கோயம்பேடு - ஆவடி ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, மத்திய அரசின் ஒப்புதலை பெற்று, இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில்களின் சேவை விரிவாக்கம் வாயிலாக, பொதுமக்கள் பொதுபோக்குவரத்து பயன்படுத்துவது அதிகரிக்கும்.
சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, மெட்ரோ ரயில் போக்குவரத்து பெரிய பங்களிப்பாக இருக்கும்.
குத்தம்பாக்கம் பஸ் நிலையம், பரந்துார் விமான நிலையம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளை இணைக்க உள்ளோம்.
பூந்தமல்லி - பரந்துார் மெட்ரோ விரிவாக்க திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன், நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு முதல்கட்டமாக, பூந்தமல்லி - சுங்கவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.