/உள்ளூர் செய்திகள்/சென்னை/இறைவனை காணும் வழியை நடனத்தில் காட்டிய ஸ்ரீலதாஇறைவனை காணும் வழியை நடனத்தில் காட்டிய ஸ்ரீலதா
இறைவனை காணும் வழியை நடனத்தில் காட்டிய ஸ்ரீலதா
இறைவனை காணும் வழியை நடனத்தில் காட்டிய ஸ்ரீலதா
இறைவனை காணும் வழியை நடனத்தில் காட்டிய ஸ்ரீலதா
ADDED : ஜன 07, 2024 12:41 AM

நாட்டிய கலைஞர் ஸ்ரீலதா வினோத் நடனம், கிருஷ்ண கான சபாவில் நடந்தது. மாலை வேளையில் காமாட்சியாய் அமர்ந்து, தன் நிகழ்ச்சியை இனிதே துவங்கினார்.
அம்பாளையும், கமல விழியாவின் ஒப்பனையையும் விதவிதமாக காட்டினார். மதகழ நடையையும், சிருங்கார சிரிப்பையும் காட்டி, ஸ்ரீ சங்கரியாக அமர்ந்ததும் பாடலுக்கேற்ற காமாட்சி என்ற கதியும், சொற்களுக்கு ஏற்றார் போல் அமைந்த தீர்மானமும் அரிதியும், நிகழ்ச்சியை மேலும் ரசிக்க வைத்தன.
சுஜித் நாயிக்கின் புல்லாங்குழல் இசையுடன், முக்கிய உருப்படியான ஸ்வரகதி ஆரம்பித்தது. திஸ்ர கதியில், திரிகால கதி ஆரம்பிக்க, ஒரு பெரிய கணக்குகளுடன் அற்புதமாக நடனம் அமைந்தது.
நாயகனிடம், தன்னுடைய தலைவியின் பெருமைகளை கூறி அவளே உங்களுக்கு சிறந்தவள் என, தோழி தெரிவிக்கும் வகையில் சஞ்சாரிகள் அமைந்தன.
மேகம் போன்ற கூந்தல், வண்டு போன்ற கண்கள், அன்னம் போன்ற நடை என, அவளுடைய அழகையும், அறிவையும் தோழி எடுத்துரைப்பதை நாட்டியத்தில் அற்புதமாக வெளிப்படுத்தினார்.
எட்டு திசை தேவதைகளையும், மூன்று லோகங்களையும் காக்கும் பெருமாளே எனக்கூறும் முத்தாயிஸ்வரம் அமைய, எதிர்திசையாக நேர்த்தியாக அமைந்த அடவுகளோடு, அழகாக அமைந்தது சரணம். நாயகனுக்கு தலைவியின் காதலை உணர்த்தி, தோழி அழைத்து செல்ல ஸ்வரகதி நிறைவடைந்தது.
வில்லிசையில் சுகன்யா மூழ்கடிக்க, மலர்சொரிந்து வரும் காட்சியோடு ஆரம்பித்தது பைரவி ராகம் மிஸ்ரசாபு தாளத்தில் திருவருட்பா.
கண்கள் எனும் கதவை சாற்றி, மனம் வாய் இரண்டையும் பூட்டினால், உண்மையான இறைவனை காணமுடியும் என்பதை, நடனத்தின் மூலம் விளக்கினார்.
'தொட்டு தொட்டு பேச வர்றான்' பாடல் மூலம் வெட்கத்தில் மூழ்கடிக்க, மத்யமாவதி ராக தில்லானா, விறுவிறுப்பாக ஆரம்பித்தது.
சரண வரிகளில் குறிப்பிடுவதுபோல், அண்டம் மகிழ்ந்து என்பதற்கு இணையாக, மகிழ்ச்சி வெள்ளத்தில் நாற்புறமும் சூழ, அம்சமான உருப்படி வந்தது.
சாந்தா தனஞ்செயன் நட்டுவாங்கம் செய்ய, நந்தினி ஆனந்த் சர்மா பாட்டிசை வழங்க, வேத கிருஷ்ணராம் மிருதங்க இசை வழங்க, அற்புதமாய் அரங்கமே கரவொலிகளில் மூழ்க நிகழ்ச்சி நிறைவடைந்தது.
-மா.அன்புக்கரசி,
ஈரோடு.