/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பேரிடர்களை சமாளிக்க வசதியாக சென்னைக்கு பிரத்யேக ஆணையம் பேரிடர்களை சமாளிக்க வசதியாக சென்னைக்கு பிரத்யேக ஆணையம்
பேரிடர்களை சமாளிக்க வசதியாக சென்னைக்கு பிரத்யேக ஆணையம்
பேரிடர்களை சமாளிக்க வசதியாக சென்னைக்கு பிரத்யேக ஆணையம்
பேரிடர்களை சமாளிக்க வசதியாக சென்னைக்கு பிரத்யேக ஆணையம்
ADDED : மே 27, 2025 01:13 AM
சென்னை,
சென்னையில், வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள வசதியாக, சென்னை நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை, தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் அதிகரித்து வரும் பேரிடர் பாதிப்புகளை தடுக்க, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதேநேரம், பல்வேறு துறைகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாமல், பணிகளில் தேக்கம் அடைகின்றன. இவற்றை தவிர்க்க, பேரிடர் மேலாண்மை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்தது.
அதன் அடிப்படையில், சென்னைக்கு தனியாக பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை மாநகராட்சி கோரிக்கை வைத்தது. கோரிக்கையை ஏற்று, சென்னை நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை, தமிழக அரசு அமைத்துள்ளது.
இதற்கான உத்தரவை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ளார். இதற்கான அரசாணை, அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மாகநராட்சி கமிஷனர்
ஆணைய தலைவராக, சென்னை மாநகராட்சி கமிஷனர், துணை தலைவராக சென்னை கலெக்டரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
உறுப்பினர்களாக போலீஸ் கமிஷனர், மாநகராட்சி பணிகள் துறை துணை கமிஷனர், நகர சுகாதார அதிகாரி, சி.எம்.டி.ஏ., தலைமை செயல் அதிகாரி, நீர்வளத்துறையின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகரில் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் திட்டங்களை உருவாக்குவது, அதை செயல்படுத்துவதுதான் ஆணையத்தின் முக்கிய நோக்கம். அவசர காலத்தில், பேரிடரை சமாளிக்கும் வகையில், ஆணையத்தால் தீர்வை ஏற்படுத்த முடியும்.
உதாரணமாக, வெள்ள பாதிப்பு நேரங்களில், மாற்று வழியில் நீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். மாற்று வழி நிலம் தனியாருக்கு சொந்தமாக இருந்தால், ஆணையம் எடுக்கும் முடிவுக்கு, நில உரிமையாளர் கட்டுப்பட வேண்டி வரும்.
இதுபோன்ற ஆணையம் மற்ற மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும். சென்னையில் மட்டுமே, மாநகராட்சி கமிஷனர் தலைமையில் இயங்க உள்ளது.
இதன் வாயிலாக, அரசின் அனைத்து துறைகளுடன் இணைந்து, பேரிடர்களை எதிர்கொள்ள திட்டங்கள் தயார் செய்து, செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
***.