/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள மண்; மழைக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள மண்; மழைக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு
சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள மண்; மழைக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு
சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள மண்; மழைக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு
சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள மண்; மழைக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு
ADDED : செப் 15, 2025 12:49 AM

கிண்டி; கிண்டியில், சாலையோரம், 300 மீட்டர் நீளத்திற்கு கழிவு மண் குவித்து வைக்கப்பட்டு உள்ளதால், கனமழை பெய்யும் போது பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அடையாறு மண்டலம், 172வது வார்டு, கிண்டி, எம்.ஆர்.சி., நகர் சாலை, சுற்றியுள்ள பிற சாலைகளை விட தாழ்வாக உள்ளது. அதனால், கனமழை பெய்தால், இந்த சாலையில் வெள்ளம் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படும்.
பல்வேறு பகுதிகளில் வடிகால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டிய போது எடுக்கப்பட்ட மண், கட்டட கழிவுகளை இந்த சாலையில், 300 மீட்டருக்கு மலை போல் குவித்து வைத்துள்ளனர்.
தாழ்வான பகுதியானதால், கனமழை பெய்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையில் தேங்கிவிடும். மேலும், நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தி, சுற்றியுள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது.
அதோடு, ஆறாக ஓடும் மழைநீருடன் சேரும் மண், வடிகால்வாய், ஜல்லடை, வீடுகளில் உள்ள கழிவுநீர் வெளியேற்றம் வடிகட்டி போன்ற பகுதிகளில் புகுந்து, அடைப்பு ஏற்படுத்தும். இதனால், கழிவுநீர் வெளியேறி, சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பலத்த காற்றடித்தால், மண் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள், பாதசாரிகளை நிலைதடுமாற செய்து, விபத்தில் சிக்க வைக்கிறது. வீடுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ப ருவமழை பெய்ய துவங்கினால், இந்த மண் சாலையில் பரவி, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை உணர்ந்து, மண்ணை அங்கிருந்து அகற்ற, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.