Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பால் மணக்குது! பழம் மணக்குது! பழநி மலையிலே! :தைப்பூசம் ஸ்பெஷல்

பால் மணக்குது! பழம் மணக்குது! பழநி மலையிலே! :தைப்பூசம் ஸ்பெஷல்

பால் மணக்குது! பழம் மணக்குது! பழநி மலையிலே! :தைப்பூசம் ஸ்பெஷல்

பால் மணக்குது! பழம் மணக்குது! பழநி மலையிலே! :தைப்பூசம் ஸ்பெஷல்

UPDATED : ஜன 25, 2024 11:20 AMADDED : ஜன 25, 2024 01:02 AM


Google News
Latest Tamil News

இந்த நாள் நல்ல நாள்


கடக ராசியைச் சேர்ந்தது பூச நட்சத்திரம். இதன் அதிபதி சந்திரன். தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் இருப்பார். இந்த நாளில் சூரியனும், சந்திரனும் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையால் பார்த்துக் கொள்வர். தை பவுர்ணமியன்று, பூச நட்சத்திரத்தின் போது இப்பார்வைக்கு ஆற்றல் அதிகம். சிவபெருமானின் அம்சம் சூரியன்; அம்பிகையின் அம்சம் சந்திரன். இந்த நல்ல நாளில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். பழநியில் இரண்டு கோயில்முருகனின் ஆறு படைவீடுகள் - திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகியவை. இதில் மூன்றாம் படைவீடான பழநியில் மட்டும் இரண்டு கோயில்கள் உள்ளன. அடிவாரத்திலுள்ள கோயில் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் பாடியுள்ளார். இதுவே முதல் கோயிலான குழந்தை வேலாயுதர் கோயில். மலையிலுள்ள தண்டாயுதபாணி கோயில் போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

செவ்வாய் தோஷம் தீர...


செவ்வாய்க்குரிய தலமான பழநியில் உள்ள முருகன் சன்னதி மேற்கு நோக்கி உள்ளதால் அதற்கு சக்தி அதிகம். இங்கு 42 துாண்கள் கொண்ட பாரவேல் மண்டபம் உள்ளது. சுக்கிரனின் எண் 6. இதைக் குறிக்கும் வகையில் துாண்களின் கூட்டுத்தொகை 4+2 = 6. பாரவேல் மண்டபத்தில் சுக்கிர ஹோரை அல்லது வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கும். செல்வம் சேரும். செவ்வாய் தோஷம் விலகி திருமணம் கைகூடும்.

இழந்ததை மீட்க...


முருகனுக்கு உகந்த கிழமையான வெள்ளிக்கிழமையன்று விரதமிருப்பதற்கு 'கந்த சுக்கிர வார விரதம்' என்று பெயர். இந்நாளில் முருகனை வழிபட்டால் மனநலம், உடல்நலம், செல்வம் பெருகும். அன்று காலையில் சாப்பிடக் கூடாது. மதியம் ஒருவேளை உணவும், இரவில் பால், பழம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். 'ஓம் சரவணபவ' என்னும் மந்திரத்தை ஜபிக்கவும். கந்தசஷ்டிக் கவசம், சண்முக கவசம், கந்தகுரு கவசம் பாடுவது நல்லது. பார்க்கவ முனிவரின் ஆலோசனைப்படி முன்பு பாரத நாட்டை ஆண்ட மன்னரும், ஆகாய கங்கையை பூமிக்கு வரவழைத்தவருமான பகீரதன் மூன்றாண்டு விரதமிருந்து இழந்த செல்வத்தை மீட்டார்.

விடியல் எப்போது


*அதிகாலையில் கூவும் சேவல் போல, எப்போது எனக்கு விடியல் பிறக்கும் என வேண்டுவது சேவல் காவடி.* குழந்தைக்கு தாய்ப்பால் உணவு. முதுமைக்கு பசுவின் பால் உணவு. இறக்கும் முன் உயிர் துடிக்கும் போதும் பால் ஊற்றுவர். மறைந்த பின் இரண்டாம் நாளன்றும் பாலுாற்றுவர். ''பிறப்பு முதல் இறப்பு வரை என்னுடன் துணையிரு... முருகா!'' என வணங்குவதே பால்காவடி.* துன்பங்களால் ஏற்பட்ட வேதனையை தணியச் செய்வது பன்னீர், சந்தனக்காவடிகள்.* மனைவி, குழந்தைகள், உறவினர் என எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாக என்னுடன் உள்ளனர். அவர்களை கரை சேர்ப்பாய் முருகா... என வேண்டுவது புஷ்பக்காவடி.* கடலில் உள்ள மீன் போலவும், கருடனைக் கண்ட பாம்பு போலவும் தவிக்கிறேன். இதில் இருந்து மீட்டு கரை சேர்க்க வேண்டும் என்பது மச்ச, சர்ப்பக் காவடிகள்.

கந்தன் என்றால்...


'கந்தன்' என்றால் 'பகைவரை பலம் இழக்கச் செய்பவர்'. பகைவர் என்பது நம் மனமே. தேவையில்லாததை மனம் சிந்திக்கிறது. அதை தடுத்து காப்பவர் கந்தன். 'கந்து' என்றால் 'யானையைக் கட்டிப்போடும் தறி'. உயிர்கள் என்னும் யானையை ஆசையில் இருந்து காப்பவன் கந்தன். 'கந்து' என்ற சொல்லுக்கு 'பற்றுக்கோடு' என பொருள் உண்டு. கந்தனை பற்றினால் பிணி தீரும்.

பிரச்னை தீர...

முருகனைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் பாம்பன்சுவாமிகள். முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர். இவர் பாடிய 'சண்முக கவசம்' பாடல்கள் நோய் தீர்க்கும் மருந்து. அவரின் இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த போது குதிரைவண்டி மோதியதில் இடதுகால் ஒடிந்தது. 73 வயதில் விபத்து நேர்ந்ததால் நடக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சண்முக கவசம் பாடி முருகனருளால் குணம் அடைந்தார். இதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர். உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18ஐ முதல் எழுத்தாகக் கொண்ட 30 பாடல்கள் சண்முக கவசத்தில் உள்ளன. இதை தினமும் ஆறுமுறை பாடினால் பிரச்னை தீரும்.

கடலுக்குள் கந்தன்


திருச்செந்துார் முருகன் உற்ஸவர் சிலையைக் டச்சுக்காரர்கள் கடத்திச் சென்றனர். வழியில் புயல் வீசவே சிலையை கடலுக்குள் வீசினர். ஐந்தாண்டாக சிலை இல்லாமல் கோயிலில் வழிபாடு நடக்கவில்லை. அதனால் பக்தரான வடமலையப்ப பிள்ளை புதிய சிலை வைக்க முடிவு செய்தார். அப்போது அவரது கனவில் கடலுக்குள் சிலை இருப்பதை முருகன் உணர்த்தினார். கடலுக்குள் தேடிய போது ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் மிதக்கக் கண்டார். அங்கிருந்து சிலையை மீ்ட்டார். மீண்டும் கோயிலில் உற்ஸவர் முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை தொடங்கியது.

செந்துாரான் அருளால்...


பதினேழாம் நுாற்றாண்டில் அவதரித்தவர் குமரகுருபரர். முருகனருள் பெற்ற இவர், தன் குருநாதரான ஞானதேசிகரின் கட்டளைப்படி காசியில் ஆன்மிகத் தொண்டில் ஈடுபட்டார். விஸ்வநாதரின் மீது காசிக்கலம்பகமும், சரஸ்வதியின் மீது சகல கலாவல்லி மாலையும் பாடினார்.இப்பகுதியை ஆண்ட முகமதிய மன்னர் ஒருவரை மடம் கட்டுவதற்காக பார்க்கச் சென்றார். அப்போது அவருக்கு ஆசனம் தரவில்லை. கோபமுற்ற குமரகுருபரர், காளியின் அருளால் சிங்கத்தை வரவழைத்து அதன் மீது அமர்ந்தார். ஆச்சரியப்பட்ட மன்னர் மடம் கட்ட இடம் கொடுத்தார். காசியில் இவர் நிறுவிய குமாரசுவாமி மடமும், கேதாரேஸ்வரர் கோயிலும் முக்கியமானவை.

மலைக்கோயில் வழிபாடு ஏன்


தைப்பூச நாளில் தான் உலகம் படைக்கப்பட்டது. பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்நாளில் தோன்றின. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மலைக்கோயில்களில் வழிபாடு நடக்கிறது. சக்தியும், சிவனும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனதும் தைப்பூசத்தன்று தான். சூரசம்ஹாரத்தின் போது பார்வதி தன் சக்தியெல்லாம் திரட்டி முருகப்பெருமானுக்கு வேல் வழங்கியதும் இந்நாளில்தான். பூசநட்சத்திரத்தன்று வள்ளியை திருத்தணியில் திருமணம் செய்தார் முருகன்.

தீர்த்தம் செல்லும் பாதை


கொடைக்கானல் மலை, வராகமலைக்கு நடுவே கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது பழநி. மலைக்குச் செல்ல 697 படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டு பாதை, யானைப்பாதை, விஞ்ச், ரோப்கார் மூலம் மலைக்கு செல்லலாம். கருப்பசாமி சன்னதியில் வழிபட்ட பின், யானைப்பாதை வழியே மலையேற வேண்டும். மலையின் பின்புறம் திருமஞ்சனப்பாதை உள்ளது. 'திருமஞ்சனம்' என்றால் அபிஷேகம். சுவாமியின் அபிேஷகத்திற்கு எடுத்து வரப்படும் கொடுமுடி தீர்த்தத்தை இதில் கொண்டு செல்வதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us