/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குழாய் வெடித்து சுக்குநுாறான சாலை திருமங்கலத்தில் ஆறாக ஓடிய கழிவுநீர் குழாய் வெடித்து சுக்குநுாறான சாலை திருமங்கலத்தில் ஆறாக ஓடிய கழிவுநீர்
குழாய் வெடித்து சுக்குநுாறான சாலை திருமங்கலத்தில் ஆறாக ஓடிய கழிவுநீர்
குழாய் வெடித்து சுக்குநுாறான சாலை திருமங்கலத்தில் ஆறாக ஓடிய கழிவுநீர்
குழாய் வெடித்து சுக்குநுாறான சாலை திருமங்கலத்தில் ஆறாக ஓடிய கழிவுநீர்
ADDED : ஜூன் 30, 2025 04:05 AM

திருமங்கலம்:நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட ராட்சத கழிவுநீர் குழாய் வெடித்ததில், திருமங்கலம் - கோயம்பேடு 100 அடி சாலையில் பெரிய அளவில் சாலை உள்வாங்கி கடும் சேதமடைந்தது. இதனால், சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீரால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணா நகர் 'பி' பம்பிங் நிலையத்தில் இருந்து, கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட குழாய் செல்கிறது. 1,000 மில்லி மீட்டர் விட்டம் உடைய இந்த இரும்பு குழாய், 10 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டது.
இதில், திருமங்கலம் - கோயம்பேடு நோக்கி செல்லும், 100 அடி சாலையில் புதைக்கப்பட்ட குழாய், நேற்று காலை திடீரென வெடித்து, சாலை மிகவும் சேதமடைந்தது.
இதனால், அதிகப்படியான கழிவுநீர் வெளியேறி, சில மீட்டர் துாரம் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் அப்துல், துணை பகுதி பொறியாளர் புவியரசு ஆகியோர் குழாய் உடைப்பு பகுதியை ஆய்வு செய்தனர்.
உடனடியாக, பம்பிங் நிலையத்தில் வால்வை மூடியதால், பெருக்கெடுத்து ஓடிய நீர் படிப்படியாக குறைந்தது. சாலையில் தேங்கிய கழிவுநீரை, அருகில் இருந்த கூவம் ஆற்றில் திருப்பிவிட்டனர். தவிர, பள்ளம் எடுத்து, சாலையை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால், நேற்று முழுதும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
திருமங்கலம் - கோயம்பேடு செல்லும் பாதையில் உள்ள இரும்பு குழாய், அதிக அழுத்தம் காரணமாக வெடித்துள்ளது. பெரிய நிறுவனங்களின் குடியிருப்புகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான கழிவுநீரால் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம்.
இந்த தடத்தில் எங்கெல்லாம் உடைப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை ஆய்வு செய்யவுள்ளோம். ஒரு நாளுக்குள் குழாய் உடைப்பு கண்டறிந்து முழுமையாக சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.