Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மேம்பால பணிக்கு அனுமதி தராமல் ரயில்வே.. இழுத்தடிப்பு . கொருக்குப்பேட்டை, வியாசர்பாடியில் கடும் நெரிசல்

மேம்பால பணிக்கு அனுமதி தராமல் ரயில்வே.. இழுத்தடிப்பு . கொருக்குப்பேட்டை, வியாசர்பாடியில் கடும் நெரிசல்

மேம்பால பணிக்கு அனுமதி தராமல் ரயில்வே.. இழுத்தடிப்பு . கொருக்குப்பேட்டை, வியாசர்பாடியில் கடும் நெரிசல்

மேம்பால பணிக்கு அனுமதி தராமல் ரயில்வே.. இழுத்தடிப்பு . கொருக்குப்பேட்டை, வியாசர்பாடியில் கடும் நெரிசல்

ADDED : செப் 20, 2025 10:10 PM


Google News
Latest Tamil News
கொருக்குப்பேட்டை, : கொருக்குப்பேட்டையையும் கொடுங்கையூரையும் இணைக்கும் விதமாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில், 'கர்டர்' எனும் துாண்களை இணைக்கும் கான்கிரீட் கட்டமைப்பை பொருத்தும் பணிக்கு அனுமதி தராமல், ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. அதேபோல் வியாசர்பாடி கணேசபுரம் பாலத்தில் நடந்துவந்த பணிகளை மூன்று மாதங்களாக ரயில்வே நிர்வாகம் நிறுத்தியுள்ளதால், மூலக்கொத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கொருக்குபேட்டை எழில் நகர், எம்.ஜி.ஆர்.நகர், நேரு நகர், கார்னேசன் நகர், குமரன் நகர், அஜீஸ் நகர், சந்திரசேகர் நகர், கருமாரியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.

இதில் பிரதான பகுதியான எழில் நகரில், ரயில்வே கேட் உள்ளது. கொருக்குபேட்டையையும், கொடுங்கையூரையும் இணைக்கும் இந்த ரயில்வே கேட்டை கடந்து தான், தினம் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர, மணலி, தண்டையார்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும், இப்பகுதியை கடந்துதான் பயணிக்கின்றன.

இந்நிலையில், அடிக்கடி வந்து செல்லும் சரக்கு ரயில்களால், இந்த ரயில்வே கேட் தினமும் 30 முறைக்கு மேல் மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்; போக்குவரத்து நெரிசலும் அதிகரித்தது.

இந்த பிரச்னை 40 ஆண்டுகளாக இருப்பதால், இதற்கு தீர்வு காண மேம்பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்ததை அடுத்து, எழில் நகர் ரயில்வே கேட் பகுதியில் 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க முடிவானது. ரயில்வே பகுதியில் பாலம் அமைக்க, ரயில்வே துறையும் ஒப்புதல் அளித்தது.

தொடர்ந்து, கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் அருகே, 2023, மார்ச் மாதம், மேம்பால கட்டுமான பணி துவங்கப்பட்டது.

இப்பணியால் வாகன ஓட்டிகள் பாதிக்காமல் இருக்க, மாற்றுப்பாதையாக அன்னை சத்யா நகர், சுண்ணாம்பு கால்வாய் ரயில்வே இணைப்பு சாலையில் கான்கிரீட் சாலை அமைத்து, போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

மாநில நெடுஞ்சாலைத் துறை பணிகள் மேம்பால பணிகள் 85 சதவீதம் முடிந்த நிலையில், ரயில்வே சார்பில் நடக்க வேண்டிய 10 சதவீத பணிகள், ஐந்து மாதங்களாக கிடப்பில் போட்டப்பட்டுள்ளன.

அதாவது இரு பகுதிகளில், துாண்களை இணைக்கவும், பாலத்தை தாங்கும் வகையிலும் அமைக்கப்படும் 'கர்டர்' எனும் கான்கிரீட் கட்டமைப்பை பொருத்துவதில், ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது.

இதனால், கொருக்குபேட்டை மற்றும் மூலக்கொத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள், பகுதிமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரி நெடுஞ்சாலையில், ஜீவா ரயில் நிலையம் அருகே, கணேசபுரம் சுரங்கப்பாதை உள்ளது. வியாசர்பாடி, கொளத்துார், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை ஆகிய பகுதிகளுக்கு செல்வோர், வியாசர்பாடி - கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டும்.

இப்பகுதியிலும் 226 கோடி ரூபாயில் மேம்பால கட்டும் பணி நடந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி.,யின் அங்கீகாரத்துடன், 600 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்திலும் கட்டப்படுகிறது.

புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டியில் இருந்து ஒருவழியும்; வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு மற்றொரு வழிபாதையாகயும் அமைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள ரயில்வே பாதையில் 58 மீட்டர் கட்டுமான பணி துவங்கியது.

இதற்காக, 45 அடி உயரத்திற்கு இரும்பு துாண்கள் அமைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ரயில்வே துறையினர், மூன்று மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளதால், கட்டுமான பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

கொருக்குப்பேட்டை, எழில் நகர் மேம்பால பணியும்; வியாசர்பாடி, கணேசபுரம் மேம்பால பணியும் நடந்து வருவதால் அனைத்து வாகனங்களும் மூலக்கொத்தளம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதால், 'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரங்களில், இப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்து கொடுங்கையூர், மூலக்கடை, வியாசர்பாடி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், நெரிசலில் சிக்கி தினமும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

அதேபோல் கொடுங்கையூர், வியாசர்பாடி, பகுதியில் இருந்து திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, எண்ணுார், ராயபுரம் பகுதிகளுக்கு செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில், விபத்துகள் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. ரயில்வே நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் அனுமதி வழங்கி, எஞ்சிய பணிகளை முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொடுங்கையூர், எழில் நகர் பகுதியில் இருந்து கொடுங்கையூர் குப்பை கிடங்கு வரை மற்றும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில், தார் சாலை, மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. இரு பகுதிகளையும் இணைக்க 'கர்டர்' எனும் கட்டமைப்பை பொருத்துவதில், ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. ரயில்வே துறை சார்பில் உள்ள 72 மீட்டர் மேம்பால பணிகளுக்காக 10 முறைக்கும் மேல் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ரயில்வே நிர்வாகம் அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறது. - எபினேசர், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆர்.கே.நகர் தொகுதி






      Our Apps Available On




      Dinamalar

      Follow us