/உள்ளூர் செய்திகள்/சென்னை/வாழ தகுதியற்ற இடமாக மாறும் ஊராட்சிகள்...அதிர்ச்சி!:அதிகாரிகள் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் நாசம்வாழ தகுதியற்ற இடமாக மாறும் ஊராட்சிகள்...அதிர்ச்சி!:அதிகாரிகள் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் நாசம்
வாழ தகுதியற்ற இடமாக மாறும் ஊராட்சிகள்...அதிர்ச்சி!:அதிகாரிகள் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் நாசம்
வாழ தகுதியற்ற இடமாக மாறும் ஊராட்சிகள்...அதிர்ச்சி!:அதிகாரிகள் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் நாசம்
வாழ தகுதியற்ற இடமாக மாறும் ஊராட்சிகள்...அதிர்ச்சி!:அதிகாரிகள் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் நாசம்
ADDED : ஜூன் 24, 2024 02:15 AM

புழல்:விதிமீறி செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளில் வெளியேற்றப்படும் கழிவுகளால், புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள், வாழத் தகுதியற்ற இடங்களாக மாறி வருகின்றன. இந்த ஊராட்சிகளை காக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னை, புழல் ஒன்றியம், இரண்டாவது வார்டுக்கு உட்பட்டவை விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம் ஊராட்சிகள். இவற்றில் கோமதி அம்மன் நகர், சக்ரா கார்டன், பிரியா நகர், திருப்பதி நகர், காந்தி நகர் என, 20க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இவற்றில், 6,800 வாக்காளர்கள் உள்ளனர்.
இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலை, ரசாயன கலவை, சிமென்ட், தார் கலவை, அரிசி ஆலை உள்ளிட்ட தொழிற்சாலைகளும், அவற்றுக்கான கிடங்குகளும் உள்ளன.
வீட்டு மனைகளுக்காக அமைக்கப்பட்ட இடத்தில், கட்டட அனுமதி உள்ளிட்ட உரிய அனுமதி ஏதுமின்றி, தொழிற்சாலை மற்றும் கிடங்குகள் இயங்குகின்றன.
அவற்றில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்து வகையான கழிவுகளும், தொழிற்சாலைகள் சட்டப்படி முறையாக சுத்திகரிக்கப்படாமல், விதிமீறி அருகிலுள்ள காலி வீட்டு மனைகளில் விடப்படுகின்றன.
இதனால் நிலத்தடி நீர், காற்று என, சுற்றுச்சூழல் மிக மோசமாக மாசடைந்துள்ளது. மேலும், டன் கணக்கில் தினமும் எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வெளியாகும், 'டையாக்சின்' எனும் நச்சு வாயு, மக்களின் உடல் நலத்தை பாதிக்கிறது.
தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் இயங்கும் தொழிற்சாலை, கிடங்குகளில் மின் கோளாறு காரணமாக ஏற்படும் தீ விபத்துகளாலும், பல மணி நேரம் நீடிக்கும் மின் தடையாலும், பகுதிவாசிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.
சி.எம்.டி.ஏ., அனுமதியின்றி பல ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டப்படும் தொழிற்சாலை, கிடங்கு பணிகளுக்காகவும், அவற்றின் தேவைக்காகவும், அருகிலுள்ள ஏரி நீர், நிலத்தடி நீர் ஆகியவை திருடப்படுகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், புழல் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் புகார் செய்தால், விசாரணை கூட நடப்பதில்லை.
போராட்டம்
ஒரு சில நிறுவனங்களுக்கு, பெயரளவில் அறிவிப்பு, 'நோட்டீஸ்' வழங்கும் அரசு அதிகாரிகள், அந்நிறுவன நிர்வாகிகள்,'கவனிப்பு' செய்த பின், 'அடக்கி வாசிப்பதால்' பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அந்த ஊராட்சிகளில் வீடு கட்டி வசிக்கும் எண்ணத்தில் இடம் வாங்கி வைத்துள்ளவர்கள், மேற்கண்ட பிரச்னைகளால், நிம்மதி பறிபோய் விடும் என, வீடு கட்டும் எண்ணத்தை கைவிட்டுள்ளனர். வேறு வழியின்றி அங்கே வசிப்பவர்கள், சுகாதார சீர்கேட்டுடன் போராடி வருகின்றனர்.
அதேபோல, அங்குள்ள காலிமனைகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தின்று ஆடு, மாடுகளும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன.
அதிகாரிகளின் அலட்சியத்தால், நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்து விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளும், மக்கள் வாழத் தகுதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன.
என் வார்டில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில், உரிய அனுமதி பெறாத தொழிற்சாலை மற்றும் கிடங்குகள் உள்ளன. இது குறித்து, அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்து புகார் செய்கிறேன். ஆனால், அவர்கள் மக்களுக்கும், மனச்சாட்சிக்கும் எதிராக செயல்படுகின்றனர். இந்த ஊராட்சிகளை காக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மல்லிகா மீரான், 63, கவுன்சிலர், புழல் ஊராட்சி