Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சகதி சாலைகளால் திணறும் மடிப்பாக்கம் இயல்பு வாழ்க்கை முடங்குவதால் அதிருப்தி

சகதி சாலைகளால் திணறும் மடிப்பாக்கம் இயல்பு வாழ்க்கை முடங்குவதால் அதிருப்தி

சகதி சாலைகளால் திணறும் மடிப்பாக்கம் இயல்பு வாழ்க்கை முடங்குவதால் அதிருப்தி

சகதி சாலைகளால் திணறும் மடிப்பாக்கம் இயல்பு வாழ்க்கை முடங்குவதால் அதிருப்தி

ADDED : ஜூன் 24, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
மடிப்பாக்கம்:பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கத்தில் 187 மற்றும் 188 என இரு வார்டுகள் உள்ளன. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இங்கு, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், குடிநீர் வழங்கல் என, மூன்று திட்டத்திற்கான பணிகள், 2022ல் துவக்கப்பட்டன. இரு ஆண்டுகளாக நடந்து வரும் இப்பணிகளால், அப்பகுதியின் இயல்பு சூழல் தற்போது வரை முடங்கி உள்ளது.

சாலைகள் தோண்டப்பட்டு, குண்டும் குழியுமாகி உள்ளது. மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி, நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளன.

பல தெருக்களின் குறுக்கே, மழைநீர் வடிகால் பணிகளுக்கான கல்வெர்ட் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளதால், அத்தெருக்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

இதனால் ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால், மாணவர்கள், நோயாளிகள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

பகுதி மக்கள் கூறியதாவது:

மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள சுணக்கம், குளறுபடிகளால் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை. சேதமாக்கப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படவில்லை. இதனால், பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம்.

சில இடங்களில் களிமண்ணாக இருப்பதால் நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சேற்றில் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

ராஜராஜேஸ்வரி நகர், ராஜலட்சுமி நகர், பெரியார்நகர், காலனி பகுதி, அம்பேத்கர் சாலை உள்ளிட்ட இடங்களில் நான்கு சக்கர வாகனங்கள் ஒருமாதத்திற்கு மேலாக வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் ஆங்காங்கே நான்கு அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கி காணப்படுகிறது. ஒரு நாள் மழை பெய்யாமல் விட்டால் மட்டுமே வீட்டில் இருந்து மக்கள் வெளியே வர வழி கிடைக்கிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தவிர, மழைநீர் வடிகாலுக்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் நீர் தேங்கி, கொசு உற்பத்தி மிகுதியாகி, மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்து வருகிறது.

முடக்கப்பட்ட சாலைகளால் போக்குவரத்து மட்டுமல்லாது, இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

பணிகளை விரைந்து முடித்து, சேதமாக்கப்பட்ட சாலைகளை சரியாக சீரமைத்து தருவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இரு துறைகளால் பாதிப்பு


மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. குடிநீர் வாரியம் வாயிலாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இரு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படாததே இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம். தவிர, ஒரு தெருவில் பணியை முழுதுமாக முடித்து, அடுத்த தெருவில் பணியை துவங்க வேண்டும். இவர்கள் ஒரே நேரத்தில் அனைத்து தெருக்களிலும் பணியை துவக்கியதால், தற்போது, எல்லாமும் இழுபறியாகி, மக்களை அவதிக்குள்ளாக்கி வருகின்றனர்.



மெட்ரோ பணியும் காரணம்


கடந்த 2022 முதல் மடிப்பாக்கம் - - ---மேடவாக்கம் இடையிலான பிரதான சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், போக்குவரத்து பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்வோர் கூடுதலாக ஒரு மணி நேரத்தை செலவிடும் நிலை உள்ளது. தவிர, இந்த சாலையின் இருபுறங்களிலும் உள்ள 500க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகளின் வியாபாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us