ADDED : மே 22, 2025 12:28 AM
சென்னை, சென்னை பல் மருத்துவ கல்லுாரி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை பல் மருத்துவக்கல்லுாரி துறை தலைவர் ஒருவர், ஆசிரியைகள், மாணவியரிடம் ஆபாசமாக பேசுவது, உடல் உருவத்தை கேலி செய்வது, அவர்கள் பேசுவதை வீடியோ பதிவு செய்வது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால், மாணவியர் மன உளைச்சலில் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பேராசிரியை ஒருவர், இந்தாண்டு ஜனவரியில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவியர், 2024 மார்ச்சில் கல்லுாரி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
பெண்கள் பணிபுரியும் இடங்களில், விசாகா கமிட்டி அமைப்பது என்ன ஆனது; அரசியல் தலையீட்டால் மாணவியர் புகார் மீது ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்கவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.
முதல்வர் ஸ்டாலின் நிர்வாகச் சீர்கேட்டால், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுப்ப பெற்றோர் அஞ்சுகின்றனர். இதற்கு முடிவு கட்டும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.
தமிழகத்தில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும், மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க, அ.தி.மு.க., தயங்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
***