/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கடப்பேரி ஏரியை ஆக்கிரமித்துள்ள 530 வீடுகளை அகற்ற 'நோட்டீஸ்' கடப்பேரி ஏரியை ஆக்கிரமித்துள்ள 530 வீடுகளை அகற்ற 'நோட்டீஸ்'
கடப்பேரி ஏரியை ஆக்கிரமித்துள்ள 530 வீடுகளை அகற்ற 'நோட்டீஸ்'
கடப்பேரி ஏரியை ஆக்கிரமித்துள்ள 530 வீடுகளை அகற்ற 'நோட்டீஸ்'
கடப்பேரி ஏரியை ஆக்கிரமித்துள்ள 530 வீடுகளை அகற்ற 'நோட்டீஸ்'
ADDED : ஜூன் 13, 2025 12:18 AM
தாம்பரம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி, மேற்கு தாம்பரம், கடப்பேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றும் முயற்சியாக, 530 வீடுகளுக்கு, நீர்வளத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி, மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தில் நீர்வளத் துறைக்கு சொந்தமான, 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி ஆக்கிரமிப்பில் சிக்கி, 65 ஏக்கராக சுருங்கி விட்டது. ஏரியை நம்பி, கடப்பேரி பகுதியில் விவசாயம் நடந்து வந்தது.
கடந்த 1984ல், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் வந்த பின், விவசாய நிலம் குறைந்தது. அதன்பின், இவ்வேரி நிலத்தடி நீர் மட்டத்திற்கு மட்டுமே பயன்பட்டது.
இதை பயன்படுத்தி, மேற்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள குடியிருப்பு, ேஹாட்டல், மருத்துவமனை, பேருந்து பணிமனை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்து, தண்ணீரின் நிறம் பச்சையாக மாறிவிட்டது.
இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. மற்றொரு புறம், தண்ணீரில் புழு மிதப்பதாலும், மீன்கள் செத்து மிதப்பதாலும், சுற்றியுள்ள மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன.
அதனால், ஏரி தண்ணீரை வெளியேற்றி, துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
இதற்கிடையில், வருவாய் துறை வாயிலாக, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 530 குடியிருப்புகள் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில், படப்பை பாசனப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. குறித்த காலத்திற்குள் வீடுகளை காலி செய்யாவிட்டால், இடித்து அகற்றப்படும் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
***