Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'பஸ் பாஸ்' இருந்தும் நடுவழியில் இறக்கி விடப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்

'பஸ் பாஸ்' இருந்தும் நடுவழியில் இறக்கி விடப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்

'பஸ் பாஸ்' இருந்தும் நடுவழியில் இறக்கி விடப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்

'பஸ் பாஸ்' இருந்தும் நடுவழியில் இறக்கி விடப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்

ADDED : ஜூன் 13, 2025 12:17 AM


Google News
மதுரவாயல், மதுரவாயல் அடுத்த வானகரம், நீலகண்ட முதலி தெருவைச் சேர்ந்த மதன் வினோத், 19; மாற்றுத்திறனாளி. இவர், சிட்லபாக்கம் பகுதியில் உள்ள அரசு உதவி மையத்தில் கணினி வகுப்பு பயில்கிறார்.

வானகரத்தில் இருந்து சிட்லபாக்கம் செல்வதற்காக, அனைத்து வகை பேருந்துகளில் பயணிக்க கூடிய பாஸ் எடுத்துள்ளார்.

இவர், திருவேற்காடில் இருந்து வானகரம் வழியாக தாம்பரம் செல்லும் தடம் எண் 111 பேருந்தில், வினோத்தை ஏற்றுவதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தினமும் பிரச்னை செய்து வருகின்றனர்.

முறையான பாஸ் இருந்தும் வினோத்தை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வானகரத்தில் இருந்து தடம் எண் 111 பேருந்தில் ஏறிய மாற்றுத்திறனாளி வினோத்தை, அடுத்த நிறுத்தமான மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் வலுக்கட்டாயமாக ஓட்டுநரும் நடத்துநரும் இறக்கி விட்டனர். மேலும், அவருக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் திட்டியுள்ளனர்

சாலையில் இறக்கி விடப்பட்ட மாணவர் வினோத், அரை மணி நேரமாக செய்வதறியாது தடுமாறி நின்றார். பின், தன் தந்தைக்கு போன் செய்து வரவழைத்தார். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வினோதின் தந்தை மதன் கூறியதாவது:

வினோத்திற்கு 3 வயது உள்ள போது, பைக்கில் இருந்து கீழே விழுந்து மூளையில் காயம் ஏற்பட்டது. இதில், அவருக்கு இயங்கும் திறன் பாதிக்கப்பட்டது. தற்போது, சிட்லபாக்கம் பகுதியில் கணினி வகுப்பிற்கு சென்று வருகிறார்.

வினோதிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பேருந்து பாஸ் உள்ளது. அதில், ஏறும் இடம் இறங்கும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தாண்டி பயணிக்க முடியாது.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக தடம் எண் 111 பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர், வினோத்தை திட்டி வருகின்றனர். இந்த பேருந்தில் பாஸ் செல்லாது எனக் கூறி வந்தனர்.

இந்நிலையில், நேற்று வானகரத்தில் ஏறியவரை மதுரவாயலில் இறக்கி விட்டனர். இதனால் வினோத் செய்வது அறியாமல் தவித்தார். அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் அரசு வழங்கும் பேருந்து பாஸ் குறித்து புரிதல் இல்லாமல் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us