/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 168 இடங்களில் இயற்கை உரம் தயாரிப்பு மையங்கள்... இழுத்து மூடல் விற்பனை வித்தை கைகொடுக்காததால் மாநகராட்சி முடிவு 168 இடங்களில் இயற்கை உரம் தயாரிப்பு மையங்கள்... இழுத்து மூடல் விற்பனை வித்தை கைகொடுக்காததால் மாநகராட்சி முடிவு
168 இடங்களில் இயற்கை உரம் தயாரிப்பு மையங்கள்... இழுத்து மூடல் விற்பனை வித்தை கைகொடுக்காததால் மாநகராட்சி முடிவு
168 இடங்களில் இயற்கை உரம் தயாரிப்பு மையங்கள்... இழுத்து மூடல் விற்பனை வித்தை கைகொடுக்காததால் மாநகராட்சி முடிவு
168 இடங்களில் இயற்கை உரம் தயாரிப்பு மையங்கள்... இழுத்து மூடல் விற்பனை வித்தை கைகொடுக்காததால் மாநகராட்சி முடிவு
ADDED : ஜூன் 07, 2025 11:47 PM

சென்னையில், மக்கும் குப்பையில் இருந்து, உரம் தயாரிக்க அமைக்கப்பட்ட, 168 இயற்கை உரம் மையங்களை, மாநகராட்சி இழுத்து மூடிவிட்டது. இயற்கை உரத்தை விற்கும் வித்தை தெரியாமல் மாநகராட்சி எடுத்த முடிவால், தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி எல்லையில் தினமும் சேகரிக்கப்படும், 6,200 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பை, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த இரண்டு குப்பை கிடங்கையும், 'பயோ மைனிங்' முறையில் மீட்கும் பணியை மாநகராட்சி செய்து வருகிறது.
அதற்கு முன்னோட்டமாக, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பு மையங்களை, 2014ல் மாநகராட்சி அமைத்தது.
சுகாதார சீர்கேடு
அதன்படி, 208 மையங்களில் தினமும், 450 டன் மக்கும் குப்பை பதனிடப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டது. பின், சில மையங்கள் மூடப்பட்டு, 190 உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்பட்டு வந்தன.
இதில், தயாரிக்கப்பட்ட உரத்தை மாநகராட்சி பூங்காக்களில் பயன்படுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு கிலோ 20 ரூபாய்; வேளாண் துறைக்கு மூன்று ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்டத்தில் இருந்து கிடைத்த பணத்தை, உரம் தயாரிக்கும் பணியாளர்களுக்கே மாநகராட்சி பகிர்ந்து அளித்தது. ஆனால், உரத்தை வாங்க பெரிதாக பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
தயாரிக்கப்பட்ட, 4,000 டன் உரம் தேக்கமடைந்தது. மேலும், அமைக்கப்பட்ட உரம் தயாரிப்பு மையங்களும், மயான பூமி, மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் அமைக்கப்பட்டன. அங்கு, துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தயாரிக்கப்படும் உரமும் தேக்கமடைவதால், 168 மையங்கள் மூடப்பட்டு, தற்போது, 22 மையங்களை மட்டுமே மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் தோல்வி அடைந்தது. எனவே, மாநகராட்சி பூங்காக்கள், மியாவாக்கி காடுகள் போன்றவற்றில் பயன்படுத்தும் அளவிற்கு மட்டுமே உரம் தயாரிக்கப்படுகிறது. அதேநேரம், மக்கும் குப்பை தேங்காதவாறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூரில் குப்பை எரிஉலை அமைக்கப்பட உள்ளது. இதுபோன்றவற்றால், மாநகராட்சியில் குப்பை தேக்கம் குறைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அலட்சியமே காரணம்
இதுகுறித்து, உரம் மையத்தில் பெறுப்பாளாராக இருந்த அன்புக்கரசன் கூறியதாவது:
துாய்மை இந்தியா திட்டத்தில், 2014ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மக்கும் குப்பையில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடந்தன. சென்னையில் மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தினமும் கிட்டத்தட்ட, 300க்கும் மேற்பட்ட டன் மக்கும் குப்பை கிடைத்தன. அரசு லாபமில்லாமல்,துாய்மைப்படுத்தும் நோக்கில் இடத்தை செயல்படுத்தி வந்தது.
இந்த திட்டத்திற்கு, 2020ல் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பின், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர், இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை.
முதல் முறையாக, வடசென்னை சுடுகாட்டில் இயங்கிய உரக்கிடங்கை ஒருசிலரின் ஆதாயத்திற்காக, திசை திருப்பி மூடினர். மையங்கள் மூடப்பட்டதால் அண்ணா நகர் மண்டலத்தில் மட்டும், 140 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில், அரசிடம் போதிய ஆதரவு இல்லாமல், மாநகராட்சி அலட்சியத்தால் இழுத்து மூடப்பட்டன.
மீண்டும் இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால், குப்பையின் அளவு குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நடுரோட்டில் நிற்கிறோம்
நான் ஏழு ஆண்டுகளுக்கு மேல், அண்ணா நகர் மண்டலத்தில் உரம் தயாரிப்பு மையத்தில் பணிபுரிந்தேன். மையங்களை முழுமையாக மூடியதால், வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறேன். என்னை போல், 200க்கும் மேற்பட்டோர் நடுரோட்டில் நிற்கின்றனர். தற்காலிகமாக நிறுத்தியதாக நினைத்தோம். ஆனால், மையங்கள் எல்லாம் தரைமட்டமாக இடித்து அகற்றப்பட்டது வேதனையாக இருக்கிறது.
- இ.கணேசன், 40,
உரம் தயாரிக்கும் தொழிலாளர், கீழ்ப்பாக்கம்.
- நமது நிருபர் -