/உள்ளூர் செய்திகள்/சென்னை/திட்டமிடலின்றி ராயபுரம் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பு; சிக்கல் அதிகமாவதால் விழிபிதுங்கும் எம்.டி.சி., அதிகாரிகள்திட்டமிடலின்றி ராயபுரம் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பு; சிக்கல் அதிகமாவதால் விழிபிதுங்கும் எம்.டி.சி., அதிகாரிகள்
திட்டமிடலின்றி ராயபுரம் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பு; சிக்கல் அதிகமாவதால் விழிபிதுங்கும் எம்.டி.சி., அதிகாரிகள்
திட்டமிடலின்றி ராயபுரம் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பு; சிக்கல் அதிகமாவதால் விழிபிதுங்கும் எம்.டி.சி., அதிகாரிகள்
திட்டமிடலின்றி ராயபுரம் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பு; சிக்கல் அதிகமாவதால் விழிபிதுங்கும் எம்.டி.சி., அதிகாரிகள்
UPDATED : மே 29, 2025 07:10 AM
ADDED : மே 28, 2025 11:01 PM

சென்னை :சென்னை பிராட்வே பஸ் நிலையம், 823 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த மையமாக மாற்றப்பட உள்ளதால், ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. சரியான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்படுவதால், நெரிசல் மேலும் அதிகரித்து சேவை பாதிக்கப்படும் என்பதால், நிலைமையை எப்படி சமாளிப்பது என தெரியாமல், மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விழிபிதுங்கியுள்ளனர்.
சென்னையில் மிகவும் பழமையான பேருந்து நிலையமான பிராட்வேயில் இருந்து சோழிங்கநல்லுார், பூந்தமல்லி, கேளம்பாக்கம், கிளாம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினம் 700 பேருந்துகள், 2,000க்கும் மேற்பட்ட சர்வீஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன.
இங்கு, பல்லாயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். அதற்கேற்ப போதிய அடிப்படை வசதிகள் இல்லை.
இந்நிலையில், மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன், பேருந்து நிலையத்தை வணிக வளாகங்களோடு ஒருங்கிணைந்த மையமாக, 823 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பணிகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் துவங்க உள்ளது. இந்த பணிகளை மூன்று ஆண்டுகளில் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனால் பிராட்வே பேருந்து நிலையம், ராயபுரம் இப்ராஹிம் சாலை அருகில், 4 ஏக்கரில் உள்ள இடத்திற்கு மாற்றப்படுகிறது. தற்காலிக பேருந்து நிலைய பணிகளை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அடுத்த மாதம் இறுதிக்குள், இந்த தற்காலிக பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பிராட்வேயில் இருந்து இயக்கப்பட்ட 700 மாநகர பேருந்துகளையும் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
பிராட்வேயில் இருந்து கடற்கரை வழியாக ராயபுரம் செல்லும் சாலையில், ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதற்கிடையே, ஒரே நேரத்தில் பிராட்வே செல்லும் நுாற்றுக்கணக்கான மாநகர பேருந்துகளையும் இயக்கினால், நெரிசல் மேலும் அதிகரிக்கும்.
இதை தவிர்க்க தான், பிராட்வே பேருந்து நிலையத்தை, அருகே உள்ள பச்சையப்பன் விளையாட்டு மைதானம், பல்லவன் சாலை அருகே அல்லது தீவுத்திடல் பகுதியில் இருந்து இயக்க அனுமதி கோரினோம். எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
தவிர, பிராட்வே நிலையத்தில் பேருந்து உள்ளே வர மூன்று நுழைவுவாயில்கள், வெளியேற இரு வாயில்கள் இருக்கும். தற்காலிக பேருந்து நிலையத்தில், நுழைவுக்கு ஒன்று, வெளியேற ஒன்று மட்டுமே உள்ளது.
பேருந்துகள் நிறுத்த உள்ளே அதிக இடம் உள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் பேருந்துகள் வந்து, செல்ல நுழைவாயில்களில் சிரமம் ஏற்படும்.
பல்வேறு இடங்களில் இருந்து பிராட்வே வந்து, அதன் பின் ராஜாஜி சாலை வழியாக செல்லும் தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, ராஜாஜி சாலையில் தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பேருந்துகளை தடையின்றி இயக்க ஏற்பாடு செய்து தருமாறு, போக்குவரத்து போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையம் திறந்த பிறகும், பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படும். அப்போது, பேருந்துகளை பிரித்து இயக்குவது போன்ற நடவடிக்கையை, தமிழக அரசு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.