Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் நிலவகைப்பாடு விபரம் முடக்கம்

சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் நிலவகைப்பாடு விபரம் முடக்கம்

சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் நிலவகைப்பாடு விபரம் முடக்கம்

சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் நிலவகைப்பாடு விபரம் முடக்கம்

ADDED : ஜூன் 18, 2025 12:24 AM


Google News
சென்னை, சி.எம்.டி.ஏ., இணையதளத்தில், நில வகைப்பாடு விபரங்களை பெறும் வசதி முடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமை திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. இதில், சர்வே எண் வாரியாக நிலங்களுக்கான வகைப்பாடு வரையறுக்கப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக கிராமங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சர்வே எண்ணுக்குமான வகைப்பாடு பட்டியலிடப்பட்டது. இந்த விபரங்கள், வரைபடங்கள் மற்றும் தனி சாப்ட்வேர் வாயிலாக அறிய வசதி செய்யப்பட்டது.

சி.எம்.டி.ஏ., இணையதளத்தில், இந்த விபரங்களை பார்ப்பதற்கான வசதி, சில நாட்களாக இந்த வசதி முடங்கியுள்ளது.

இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:

சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் பகுதி வாரியாக நில வகைப்பாட்டு விபர வரைபடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த வரைபடங்களை பார்க்கும் வசதிக்குள் சென்றால், தற்போது, cmdalayout.com என்ற இணையதளத்துக்கு தொடர்பு செல்கிறது.

சி.எம்.டி.ஏ.,வுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு இணையதள இணைப்பு இதில் வருவது, மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இதே போல், 'லேண்ட் யூஸ் இன்பர்மேஷன் சிஸ்டம்' என்ற தலைப்புக்குள் சென்றால், சர்வே எண் வாரியாக நில வகைப்பாடு விபரங்கள், 'கூகுள்' வரைபட பின்னணியில் கிடைக்கும். அந்த விபரங்களும் தற்போது கிடைப்பதில்லை.

இதனால், கட்டுமான திட்டங்களை செயல்படுத்த நினைப்போர், நில வகைப்பாடு அறிய முடியாமல் தவிக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'நில வகைப்பாடு விபரங்களை சர்வே எண் வாரியாக அறியும் வசதியில், சில தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதே, இதற்கு காரணம். நிலைமை விரைவில் சரியாகும்' என்றனர்.

**





      Our Apps Available On




      Dinamalar

      Follow us