/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சமூக நலக்கூடம் இடித்து அகற்றம்: கோவிலாஞ்சேரி மக்கள் புகார் சமூக நலக்கூடம் இடித்து அகற்றம்: கோவிலாஞ்சேரி மக்கள் புகார்
சமூக நலக்கூடம் இடித்து அகற்றம்: கோவிலாஞ்சேரி மக்கள் புகார்
சமூக நலக்கூடம் இடித்து அகற்றம்: கோவிலாஞ்சேரி மக்கள் புகார்
சமூக நலக்கூடம் இடித்து அகற்றம்: கோவிலாஞ்சேரி மக்கள் புகார்
ADDED : செப் 23, 2025 01:10 AM

சேலையூர்:கோவிலாஞ்சேரியில், நல்ல நிலையில் இருந்த சமூக நலக்கூடத்தை, எவ்வித அறிவிப்பும் இன்றி இடித்துவிட்டதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பரங்கிமலை ஒன்றியம், மதுரப்பாக்கம் ஊராட்சியில், மேடவாக்கம் - மாம்பாக்கம் மற்றும் அகரம்தென் - மாம்பாக்கம் சாலை சந்திப்பான கோவிலாஞ்சேரியில், சமூக நலக்கூடம் செயல்பட்டு வந்தது.
மதுரப்பாக்கம் ஊராட்சி மக்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள மக்களும் இதை பயன்படுத்தி வந்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், குறைந்த செலவில் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த, இந்த சமூக நலக்கூடம் உதவியாக இருந்தது. மேலும், தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி மையமாகவும் பயன்பட்டு வந்தது.
இந்நிலையில், நல்ல நிலையில் இருந்த இந்த சமூக நலக்கூடத்தை, சில நாட்களுக்கு முன், எவ்வித அறிவிப்பும் இன்றி, இடித்து அகற்றி விட்டனர். பயன்பாட்டில் இருந்த நலக்கூடத்தை திடீரென இடித்து அகற்றியது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறிவிப்பின்றி சமூக நலக்கூடத்தை இடித்து அகற்றியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே இடத்தில் மீண்டும் சமூக நலக்கூடம் கட்ட வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, அப்பகுதி அ.தி.மு.க.,வினர், பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவனிடம் கேட்டபோது, “சமூக நலக்கூடமும், பின்புறம் இருந்த குடிநீர் தொட்டியும் சேதமடைந்து இருந்தன. அதனால், முறையான அனுமதி பெற்றே, அவை இரண்டும் இடிக்கப்பட்டன. இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் சமூக நலக்கூடம் கட்டப்படும்,” என்றார்.