Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குள்ளநரிகள் நடமாட்டம் பதிவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குள்ளநரிகள் நடமாட்டம் பதிவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குள்ளநரிகள் நடமாட்டம் பதிவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குள்ளநரிகள் நடமாட்டம் பதிவு

ADDED : ஜூன் 13, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், முதன்முறையாக இந்திய குள்ளநரி நடமாட்டம் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரி முதல் பெரும்பாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,482 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சதுப்பு நிலம், பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

இங்கு, 202 வகை பறவைகள் வந்து செல்வது கணக்கெடுப்பு வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 84 வகை பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்பவை.

சர்வதேச அளவிலான ராம்சார் பட்டியலில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2022ல் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, இப்பகுதியில் சூழலியல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்திய குள்ள நரிகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. பறவைகள் மட்டும் தான் இங்கு இருக்கும் என்று நினைத்த மக்களுக்கு, இத்தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 14 ஆண்டுகளாக வனத்துறையுடன் இணைந்து பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இங்கு பறவைகளை பார்ப்பதற்காக செல்லும்போது உள்ளூர் மாடுகள், நாய்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து இருக்கிறோம்.

இந்நிலையில், பறவைகள் நிலவரத்தை பார்க்க நேற்று சென்றபோது காய்ந்த புற்களுக்கு மத்தியில், இரண்டு இந்திய குள்ள நரிகள் நடமாடுவது தெரிந்தது.

சென்னையில் கிண்டி தேசிய பூங்கா, நன்மங்கலம் காப்புக்காடு ஆகிய பகுதிகளில் நரிகள் நடமாட்டத்தை பார்த்து இருக்கிறோம்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் முதல் முறையாக நரிகளை பார்த்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தேவையான உணவு கிடைப்பதன் காரணமாக, நரிகள் இங்கு வந்திருக்கலாம்.

இவை எங்கிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வந்திருக்கலாம் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us