/உள்ளூர் செய்திகள்/சென்னை/உதயநிதி கண்ணில் படாமல் கால்வாய், குடிசைகளை... மூடி மறைப்பதா? திரைச்சீலைகள் கட்டிய அதிகாரிகளால் மக்கள் கொதிப்புஉதயநிதி கண்ணில் படாமல் கால்வாய், குடிசைகளை... மூடி மறைப்பதா? திரைச்சீலைகள் கட்டிய அதிகாரிகளால் மக்கள் கொதிப்பு
உதயநிதி கண்ணில் படாமல் கால்வாய், குடிசைகளை... மூடி மறைப்பதா? திரைச்சீலைகள் கட்டிய அதிகாரிகளால் மக்கள் கொதிப்பு
உதயநிதி கண்ணில் படாமல் கால்வாய், குடிசைகளை... மூடி மறைப்பதா? திரைச்சீலைகள் கட்டிய அதிகாரிகளால் மக்கள் கொதிப்பு
உதயநிதி கண்ணில் படாமல் கால்வாய், குடிசைகளை... மூடி மறைப்பதா? திரைச்சீலைகள் கட்டிய அதிகாரிகளால் மக்கள் கொதிப்பு
ADDED : ஜூன் 23, 2025 11:59 PM

சென்னை மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றபோது, கழிவுநீர் கால்வாய் தெரியாத வகையில், திரைச்சீலைகள் கட்டி மறைத்ததுபோல், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்விலும் அரங்கேறியுள்ளது. பகிங்ஹாம் கால்வாய், அதையொட்டிய குடிசைப் பகுதிகள் திரைச்சீலை கட்டி, அதிகாரிகள் மறைத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, துணை முதல்வர் உதயநிதி வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன தொகுதி. இந்த வெற்றிதான் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கவும் காரணமாக அமைந்தது.
இந்த தொகுதியில், டாக்டர் பெசன்ட் சாலையில், சமுதாய நல மருத்துவமனை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, லாக் நகர் பகுதியில் பல்நோக்கு கட்டட திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நேற்று நடந்தன.
துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த திட்டங்களை துவக்கியும் வைத்தார். விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உதயநிதி வருகையை ஒட்டி, லாக் நகர் பகுதியில், பகிங்ஹாம் கால்வாய் மற்றும் சாலையோரத்தில் உள்ள குடிசை பகுதிகள் தெரியாத வகையில், 200 மீட்டர் துாரத்திற்கு வண்ண வண்ண திரைச்சீலைகள் போட்டு மறைக்கப்பட்டு இருந்தது.
லாக்நகர் அருகில் ஒரு புறம் பகிங்ஹாம் கால்வாயும், மறுபுறம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைகளும் உள்ளன. கால்வாய் பணிகள் முடியவில்லை என்பதை மறைப்பதற்காகவும், குடிசை பகுதிகள் உதயநிதி கண்ணில் தென்பட்டால், அவரது கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்திலும், திரைச்சீலை போட்டு அதிகாரிகளால் மறைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, சேப்பாக்கம் தொகுதி மக்கள் கூறியதாவது:
தொகுதி எம்.எல்.ஏ.,வாக பதவியேற்ற சில மாதங்கள் மட்டுமே, உதயநிதி பம்பரமாக சுழன்று, தொகுதி மேம்பாட்டு பணியை மேற்கொண்டார். அதன்பின், விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் உதயநிதி, ஓட்டளித்த தொகுதி மக்களை மறந்துவிட்டார்.
நலத்திட்டங்கள் துவக்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும், திறப்பு விழாவுக்கும் மட்டுமே தொகுதிக்கு வருகிறார். தொகுதி எம்.எல்.ஏ., என்பதால், இங்குள்ள பிரச்னைகள், மக்களின் பாதிப்புகள் குறித்த விபரங்களை, உதயநிதி அறிந்திருப்பது, அவருக்கு அதிகாரிகள் தெரியப்படுத்துவது அவசியம். ஆனால், பிரச்னைகளை மூடி மறைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டது சரியல்ல.
துணை முதல்வர் தொகுதியில் இந்த நிலை என்றால், மற்ற தொகுதிகள் எல்லாம் எப்படி இருக்கும் என்று சிந்திக்க கூட முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல்வர் ஸ்டாலின், மே, 31ம்தேதி மதுரை சென்றபோது, அவர் செல்லும் வழியில் இருந்த பந்தல்குடி கழிவு நீர் கால்வாய், அலங்காரத் துணி கட்டி, அதிகாரிகளால் மறைக்கப்பட்ட சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியது. தற்போது, சென்னையில் இது போன்ற நடந்த மூடி மறைக்கும் செயல், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியின் அவலத்தை காட்டுகிறது
சேப்பாக்கம் பகிங்ஹாம் கால்வாய் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் கூலி தொழிலாளர்களும், அடித்தட்டு மக்களும்தான் வசிக்கின்றனர். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் ஆட்சியாளர்களின் பணி. முழு பூசணிக்காயை எப்படி மறைக்க முடியாதோ அது போல் பிரச்னைகளையும் மறைக்க முடியாது. உதயநிதிக்கு தொகுதியில் மூலை முடுக்கில் உள்ள அனைத்து விபரமும் தெரிந்திருக்கும். அப்படியிருக்கும்போது, மூடிமறைக்க வேண்டிய அவசியமில்லை. குடிசைவாழ் மக்கள் ஓட்டளித்து தான் வெற்றி பெற முடியும். எனவே, அவர்களின் பிரச்னையை மறைப்பது ஆட்சியின் அவலத்தை தான் பிரதிபலிக்கிறது.
- எஸ்.குமார்,
செயற்குழு உறுப்பினர், மா.கம்யூ.,