ADDED : செப் 01, 2025 01:04 AM

அண்ணா நகர், டவர் பூங்கா அருகில், போதை மாத்திரைகள் விற்ற தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக், 29, மேடவாக்கத்தை சேர்ந்த முகமது அசாருதீன், 29, ஆகிய இருவரையும், ஜூலை 22ல் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலம், காசரோடு மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூன், 27, என்பவர் நேற்று சிக்கினார். அர்ஜூன், திருமங்கலம், முகப்பேர் பகுதிகளில் போதை மாத்திரைகள் விநியோகம் செய்பவர் என்பது தெரிந்தது. 56 கிராம் கஞ்சா, மொபைல் போன்களை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
பிளம்பரை தாக்கிய
4 பேர் கைது
தி.நகர், தர்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன குப்பையா, 46; பிளம்பர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே சென்ற கோவில் தேர் ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த வேணு, 21, அவரது நண்பர்கள் சிலர், வாத்தியம் அடித்து நடனமாடினர். அவர்களை நகர்ந்து செல்லும்படி தெரிவித்ததால், சின்னகுப்பையாவிடம் வாக்குவாதம் செய்தனர். பின், அங்கு கிடந்த கட்டையால், சின்னகுப்பையாவை தாக்கினர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னகுப்பையா புகாரின்படி, வேணு, அவரது தம்பி பிரவீன் குமார், 19, விஷால், 19, மற்றும் கார்த்திக், 19, ஆகிய நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.