/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விதிமீறல் விளம்பர பலகைகளுக்கு மாநகராட்சி கிடுக்கிப்பிடி! அனுமதி பெறுவது ஆன்லைன் முறைக்கு மாற்றம் விதிமீறல் விளம்பர பலகைகளுக்கு மாநகராட்சி கிடுக்கிப்பிடி! அனுமதி பெறுவது ஆன்லைன் முறைக்கு மாற்றம்
விதிமீறல் விளம்பர பலகைகளுக்கு மாநகராட்சி கிடுக்கிப்பிடி! அனுமதி பெறுவது ஆன்லைன் முறைக்கு மாற்றம்
விதிமீறல் விளம்பர பலகைகளுக்கு மாநகராட்சி கிடுக்கிப்பிடி! அனுமதி பெறுவது ஆன்லைன் முறைக்கு மாற்றம்
விதிமீறல் விளம்பர பலகைகளுக்கு மாநகராட்சி கிடுக்கிப்பிடி! அனுமதி பெறுவது ஆன்லைன் முறைக்கு மாற்றம்
UPDATED : மே 22, 2025 07:01 AM
ADDED : மே 21, 2025 11:47 PM

சென்னை சென்னையில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் விளம்பர பலகைகளை கட்டுப்படுத்தவும், எளிதாக அனுமதி பெறவும், ஆன்லைன் வழியே அனுமதி பெறும் புதிய நடைமுறையை, சென்னை மாநகராட்சி நேற்று அறிமுகம் செய்துள்ளது. அதேநேரம், 'அனுமதியின்றி, இஷ்டம்போல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 2023 நகர்ப்புற உள்ளாட்சி விதியில், பொது இடங்கள், தனிநபர் கட்டடங்களில் அனுமதி பெற்று விளம்பர பதாகைகள், பலகைகள் அமைக்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, அதிகபட்சமாக 40 அடி அகலம், 20 அடி உயரத்தில் விளம்பர பலகைகள் அமைக்கலாம். ஆனால், பெரும்பாலான விளம்பர பலகைகள் சாலையின் அகலம் மற்றும் இடத்தின் அகலத்தை மீறி அமைக்கப்பட்டு உள்ளன.
அச்சுறுத்தல்
குறிப்பாக, சாலை சந்திப்புகளில் ராட்சத அளவில் பெரிய அளவிலான இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, உரிய விதிமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல், விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விளம்பர பலகைகளை அகற்றும்படி, சென்னை போலீசார், அவ்வப்போது மாநகராட்சிக்கு சுற்றறிக்கை அனுப்பி வருகின்றனர்.
அதேபோல், விதிமீறிய விளம்பர பலகைகள் குறித்து, நம் நாளிதழிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன.
இந்நிலையில், விளம்பர பலகைகள் ஒழுங்குப்படுத்தும் பணியை, மாநகராட்சி துவக்கி உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் விளம்பர பலகைகள் நிறுவுவதற்கு, மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஒப்புதல் வழங்குவதில், தேவையான ஆவணங்களை நேரடியாக அலுவலகம் வந்து சமர்ப்பிக்கும் முறை இருந்தது.
இந்த முறையை மாற்றி வெளிப்படை தன்மையாகவும், திறனோடும், எளிதாகவும் அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக, 'ஆன்லைன்' வாயிலாக அனுமதி வழங்கும் முறை, நேற்று அமலுக்கு வந்துள்ளது.
நிராகரிப்பு
விண்ணப்பதாரர்கள், தங்களுடைய விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், https://chennaicorporation.gov.in/gcc என்ற மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலையையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த முறையில் எளிமையாகவும், தாமதமின்றியும் ஒப்புதல் வழங்குவதற்கும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:
விளம்பர பலகைகள் அமைக்க, 2023 நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின்படி அனுமதி வழங்கப்படும்.
போலீசாரின் தடையின்மை சான்று பெற்று, அனுமதிக்கப்பட்ட அளவில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மட்டுமே விளம்பர பலகை அமைக்க அனுமதிக்கப்படும்.
அனுமதி பெறாத விளம்பர பலகைகள் முழுதும் அகற்றப்பட்டு வருகிறது. விளம்பர பலகைகள் அமைப்போர் தரப்பில், சில புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், விண்ணப்பிக்கும் நடைமுறை எளிதாக்கப்பட்டு உள்ளது.
இதனால், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதிக்கப்படும்.
ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு, கூடுதல் ஆவணங்கள் கேட்பதுடன், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இவற்றை மீறி அனுமதியின்றி விளம்பர பலகைகள் இருந்தால், அவை அகற்றப்படுவதுடன் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை விளம்பர பலகைகளுக்கு மட்டுமே பொருந்தும். அரசியல் கட்சி பேனர்களுக்கு, நேரடியாக விண்ணப்பிக்கும் பழைய நடைமுறையே தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சியின் புதிய அறிவிப்பால், சென்னையில் விதிமீறல் பேனர்கள் கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.