/உள்ளூர் செய்திகள்/சென்னை/புறநகரில் 'மால்'கள் கட்ட நிறுவனங்கள்...ஆர்வம் !: கிளாம்பாக்கத்திற்கு மவுசு அதிகரிப்புபுறநகரில் 'மால்'கள் கட்ட நிறுவனங்கள்...ஆர்வம் !: கிளாம்பாக்கத்திற்கு மவுசு அதிகரிப்பு
புறநகரில் 'மால்'கள் கட்ட நிறுவனங்கள்...ஆர்வம் !: கிளாம்பாக்கத்திற்கு மவுசு அதிகரிப்பு
புறநகரில் 'மால்'கள் கட்ட நிறுவனங்கள்...ஆர்வம் !: கிளாம்பாக்கத்திற்கு மவுசு அதிகரிப்பு
புறநகரில் 'மால்'கள் கட்ட நிறுவனங்கள்...ஆர்வம் !: கிளாம்பாக்கத்திற்கு மவுசு அதிகரிப்பு
ADDED : ஜூன் 03, 2024 01:57 AM

சென்னையில், புறநகர் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் செயல்பட்டு வரும் நிலையில், அப்பகுதியைச் சுற்றி 'மால்'கள் கட்ட, கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இம்முனையத்திற்கு இரவு பகலாக மக்கள் வருவதால், பெருங்களத்துார், கிளாம்பாக்கம் பகுதிகளில் புதிய மால்கள் கட்டும் திட்டங்களுக்கான ஆரம்பகட்ட பணிகளில், நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
சென்னையில், சமீப காலமாக தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் அடங்கிய 'மால்'கள், மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அண்ணா சாலை, ராயப்பேட்டை, அரும்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, பழைய மாமல்லபுரம் சாலை என, பல்வேறு இடங்களில் மால்கள் வந்துள்ளன.
அனைத்து வகையான பொழுதுபோக்கு அம்சங்களும் ஒரே இடத்தில் அமைவதால், இங்கு வியாபாரமும் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், வழக்கமான இடங்களில் கட்டப்படும் கடைகளை விட, மால்களில் இடம் பிடிப்பதில் வணிக நிறுவனங்களிடம் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதில், தற்போதைய நிலவரப்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 13 மால்கள் செயல்படுகின்றன.
இவை அமைந்துள்ள பகுதிகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் இதை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சூடுபிடிப்பு
இந்நிலையில், சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 400 கோடி ரூபாயில், புதிய பேருந்து முனையம் கட்டி, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இங்கு வரும் பயணியருக்காக, பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுஉள்ளன. மேற்கொண்டு, பல வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதான பேருந்து நிலையமாக விளங்கிய கோயம்பேடுக்கு பதிலாக, அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
இதனால், கிளாம்பாக்கத்தை மையப்படுத்தி, வணிக ரீதியான ரியல் எஸ்டேட் வளர்ச்சி சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே, ஜி.எஸ்.டி., சாலையில் ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் வந்துள்ளன.
இந்நிலையில், பேருந்து முனையம் வருகையால், கிளாம்பாக்கத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால், இங்கு பெருங்களத்துார், கிளாம்பாக்கம் பகுதிகளில் புதிய மால்கள் கட்ட, கட்டுமான நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.
பெருங்களத்துாரில் முன்பு, 'ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ்' நிறுவனம் செயல்பட்டு வந்த நிலத்தை, ஸ்ரீராம் குழுமம் வாங்கி, அங்கு பல்வேறு கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக வளாகங்கள், ஐ.டி., வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
அறிவிப்பு
இதில் பயன்படுத்தாமல் உள்ள நிலங்களில், இரண்டு புதிய ஐ.டி., பூங்கா, மால் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட நிறுவனம் துவக்கி உள்ளது. அடுத்த சில மாதங்களில், இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில், ஜி.எஸ்.டி., சாலை, ரயில் பாதைக்கு நடுவில் உள்ள நிலத்தில், 7 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு, புதிய மால் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
'சிட்டி மால்' என்ற பெயரில் இங்கு, தியேட்டர், வணிக மற்றும் அலுவலக வளாகங்கள், நட்சத்திர ஹோட்டல் என, அனைத்தும் அடங்கியதாக, புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த சுதீப் ஆனந்த் என்பவர் பெயரில், இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அடுத்த சில மாதங்களில், இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -