/உள்ளூர் செய்திகள்/சென்னை/விதி மீறிய 70 கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., கிடுக்கிப்பிடி! ஒரு வாரத்திற்குள் காலி செய்ய 'நோட்டீஸ்'விதி மீறிய 70 கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., கிடுக்கிப்பிடி! ஒரு வாரத்திற்குள் காலி செய்ய 'நோட்டீஸ்'
விதி மீறிய 70 கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., கிடுக்கிப்பிடி! ஒரு வாரத்திற்குள் காலி செய்ய 'நோட்டீஸ்'
விதி மீறிய 70 கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., கிடுக்கிப்பிடி! ஒரு வாரத்திற்குள் காலி செய்ய 'நோட்டீஸ்'
விதி மீறிய 70 கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., கிடுக்கிப்பிடி! ஒரு வாரத்திற்குள் காலி செய்ய 'நோட்டீஸ்'
ADDED : ஜூன் 05, 2024 11:42 PM

அண்ணா நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட 70க்கும் மேற்பட்ட கட்டடங்களை ஒரு வாரத்தில் காலி செய்ய, அதன் உரிமையாளர்களுக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் 'நோட்டீஸ்' அளித்துள்ளனர்.
சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் ஜீவன் பீமா நகர் உள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., வாயிலாக, இங்கு 944 வீடுகள் அடங்கிய குடியிருப்பு கட்டப்பட்டது.
இதில், 216 வீடுகளில், திட்ட அனுமதி வரைபடத்திற்கு மாறாக விதிகளை மீறி, கூடுதல் அறைகள் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட அரசு துறைகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், நீதிமன்றம் தலையிட்டு உள்ளாட்சி அமைப்பிற்கும், சி.எம்.டி.ஏ.,விற்கும் உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில், இங்குள்ள 180 விதிமீறல் கட்டடங்களுக்கு, சி.எம்.டி.ஏ., 2022 ஜன., 11ல் நோட்டீஸ் அளித்தது.
இந்த நோட்டீஸ் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், கட்டட உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், இந்த கட்டடங்களின் உரிமையாளர்களிடம் கருத்து கேட்க வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், கட்டட உரிமையாளர்களை தனித்தனியாக அழைத்து வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் தெரிய வந்த தகவல்கள் அடிப்படையில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்த உத்தரவு:
இங்கு எல்.ஐ.சி., நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு வீடுகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்களை மட்டும் திரும்பப் பெறுவது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவு எடுக்கலாம்.
மற்ற கட்டடங்களில் உள்ள விதிமீறல் பகுதிகளை, ஆறு மாதங்களுக்குள் உரிமையாளர்களே இடித்து அகற்ற வேண்டும்.
உரிமையாளர்கள் இடித்து அகற்ற தவறினால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இடிப்பு நடவடிக்கையை எடுக்கலாம்.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப் பட்டது.
ஆனால், இதன்படி உரிமையாளர்களும், சி.எம்.டி.ஏ.,வும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவை முடக்கும் வகையில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்யும் திட்டத்தில், இந்த கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பித்தனர்.
நகர், ஊரமைப்பு சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட, '113சி' பிரிவின் அடிப்படையில் தான், இந்த மனுக்கள் மீது முடிவு எடுக்க முடியும். ஆனால், இந்த பிரிவைச் சேர்த்தது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், 113சி பிரிவின் கீழ் வரன்முறைக்கு விண்ணப்பிக்காத, 70க்கும் மேற்பட்ட விதிமீறல் கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது.
இது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா பெயரில், கட்டட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இங்குள்ள கட்டட உரிமையாளர்கள், விதிமீறல் பகுதிகளை இடித்து அகற்றவில்லை. இதனால், இதற்கான நடவடிக்கையை சி.எம்.டி.ஏ., எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு, 113சி பிரிவின் கீழ் வரன்முறைக்கு விண்ணப்பிக்காத கட்டட உரிமையாளர்கள், அடுத்த ஏழு நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும்.
தவறினால், சி.எம்.டி.ஏ.,வின் அமலாக்கப் பிரிவு வாயிலாக, 'சீல்' வைத்து, இடிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னையில் ஒரே வளாகத்தில், 70க்கும் மேற்பட்ட கட்டடங்களை காலி செய்ய, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நோட்டீஸ் அளிப்பதால், அந்த குடியிருப்பு உரிமையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -