/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சி.கே.டி., மாமல்லபுரம் துணை நகரத்துக்கு கருத்து கேட்பு சி.எம்.டி.ஏ., நடவடிக்கை சி.கே.டி., மாமல்லபுரம் துணை நகரத்துக்கு கருத்து கேட்பு சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
சி.கே.டி., மாமல்லபுரம் துணை நகரத்துக்கு கருத்து கேட்பு சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
சி.கே.டி., மாமல்லபுரம் துணை நகரத்துக்கு கருத்து கேட்பு சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
சி.கே.டி., மாமல்லபுரம் துணை நகரத்துக்கு கருத்து கேட்பு சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
ADDED : ஜூன் 11, 2025 01:27 AM

சென்னை, மாமல்லபுரம் துணை நகர திட்டத்துக்கு சுற்றுலா பயணியரிடம் கருத்து கேட்கும் பணிகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.
சென்னை பெருநகர் பகுதியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமழிசை, திருவள்ளூர், மீஞ்சூர் ஆகிய இடங்களில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்த சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. இத்துடன் மாமல்லபுரத்தையும் துணை நகரமாக மேம்படுத்த சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் துவக்கப்பட்டன.
இதன்படி, தற்போது மாமல்லபுரம் உள்ளூர் திட்ட குழுமத்தில் உள்ள, 57 கிராமங்களில், 25 கிராமங்களை இணைத்து புதிய துணை நகர பணிகளை சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது. இதில், 123.48 சதுர கி.மீ., பரப்பளவுக்கு உட்பட்ட பகுதிகள் இதில் அடங்கும் என, அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுற்றுலா பயணியர் நோக்கில் துணை நகர திட்டம் குறித்து கருத்து கேட்பு பணிகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது. இதற்கான படிவங்கள் ஆன்லைன் முறையில் வெளியிடப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணியர் வரும் இடங்களில், இதற்கான கியூ.ஆர்., குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணியர் தங்கள் மொபைல் போனில் இதை ஸ்கேன் செய்தால், ஆறு பகுதிகளில், 31 கேள்விகள் திரையில் வரும். ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலை தேர்வு செய்து பதிவிட்டால் போதும்.
இதில் சுற்றுலா வருவோரின் தேவைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் வகையில், இந்த கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாமல்லபுரத்துக்கு வருவதற்கான போக்குவரத்து வசதி, அங்கு உள்ளூர் அளவில் பயன்படுத்தப்படும் போக்குவரத்து வசதி, செலவுகள் குறித்த பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
இதில் தெரிவிக்கப்படும் பதில்கள் அடிப்படையில் மாமல்லபுரம் துணை நகரத்துக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
***