/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை, புறநகர் மாவட்டங்களில் இன்று ஆட்டோ ஓடாது! கட்டணம் உயர்த்த அரசுக்கு கோரிக்கை சென்னை, புறநகர் மாவட்டங்களில் இன்று ஆட்டோ ஓடாது! கட்டணம் உயர்த்த அரசுக்கு கோரிக்கை
சென்னை, புறநகர் மாவட்டங்களில் இன்று ஆட்டோ ஓடாது! கட்டணம் உயர்த்த அரசுக்கு கோரிக்கை
சென்னை, புறநகர் மாவட்டங்களில் இன்று ஆட்டோ ஓடாது! கட்டணம் உயர்த்த அரசுக்கு கோரிக்கை
சென்னை, புறநகர் மாவட்டங்களில் இன்று ஆட்டோ ஓடாது! கட்டணம் உயர்த்த அரசுக்கு கோரிக்கை
UPDATED : மார் 19, 2025 06:10 AM
ADDED : மார் 19, 2025 12:41 AM

சென்னை: ஆட்டோ கட்டணத்தை அரசு உயர்த்தி வழங்கக் கோரி, சென்னை மற்றும் புறநகரில் இன்று, ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், 1.20 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்பதால், பயணியர் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது.
தமிழகத்தில், 3.30 லட்சம் ஆட்டோக்கள் உள்ளன. இந்த ஆட்டோக்களுக்கான கட்டணம், 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ., துாரத்துக்கும் தலா 12 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கட்டணம் அமலுக்கு வந்து, 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் கட்டணத்தை அரசு மாற்றியமைக்காமல் உள்ளது.
ஆட்டோ தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினாலும், சங்கங்களுடன், அரசு பேச்சு நடத்தியோடு சரி; அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காதது, தொழிலாளர்களிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதற்கிடையே, ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், ஆட்டோவிற்காக புதிய செயலி துவங்க வேண்டும், ஆட்டோக்களில் க்யூ.ஆர்., குறியீடு ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று ஒரு நாள் ஸ்டிரைக்கை, ஆட்டோ தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த ஸ்டிரைக்கில், சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., உட்பட 13க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. இதனால், 1.20 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு, மீட்டர் கட்டணத்தை 12 ஆண்டுகளாக மாற்றியமைக்காமல் உள்ளது. இதற்கான கோப்பு, மூன்று ஆண்டுகளாக முதல்வர் மேசையில் உள்ளதாக கூறுகின்றனர்.
பெட்ரோல் விலை உயர்வு, உதிரி பொருட்கள் விலை உயர்வால், ஆட்டோ தொழிலை நடத்த முடியவில்லை. இதை நம்பியுள்ள ஐந்து லட்சம் குடும்பங்கள் சிரமப்படுகின்றன.
எனவே, ஆட்டோ கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மற்றும் புறநகரில், ஆட்டோ ஓட்டுனர்கள் நாளை - இன்று - வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், 1.20 லட்சம் ஆட்டோக்களில் பெரும்பாலானவை ஓடாது.
சென்னை அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டமும், மறியல் போராட்டமும் நடத்த உள்ளோம்.
க்யூ.ஆர்., குறியீடு செயல்படுத்த கொடுக்கும் முக்கியத்துவத்தை, மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்பதில் அரசு காட்டவில்லை. எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், அடுத்தகட்டமாக சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று, பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என்பதால், வழக்கமாக ஆட்டோக்களில் பயணிப்போர், வெளியூர் செல்வோர் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது.
பொதுமக்கள் நலன் கருதி, மாநகர போக்குவரத்து கழகமும், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராகி வருகிறது. மேலும், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
கால்டாக்சிகளும்
இன்று இயங்காது
ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் உயர்வு அளிக்க வேண்டும். அதேபோல், ஓலா, ஊபர் நிறுவனங்கள், ஓட்டுனர்களிடம், 25 சதவீதம் கமிஷன் மற்றும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கின்றன. இந்த கமிஷன் தொகையை குறைக்கக்கோரி, கால் டாக்சி ஓட்டுநர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். இதனால், சென்னையில் உள்ள 40,000 கால்டாக்சிகளில், 80 சதவீதம் ஓடாது. எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
- ஜாஹீர் ஹுசைன்,
தலைவர், தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்கள் சங்க கூட்டமைப்பு