Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வளசரவாக்கம் மண்டலத்தில் 23 தீர்மானங்கள் அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதம்

வளசரவாக்கம் மண்டலத்தில் 23 தீர்மானங்கள் அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதம்

வளசரவாக்கம் மண்டலத்தில் 23 தீர்மானங்கள் அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதம்

வளசரவாக்கம் மண்டலத்தில் 23 தீர்மானங்கள் அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதம்

ADDED : மே 22, 2025 12:15 AM


Google News
வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் ராஜன் தலைமையில், ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் விவாதித்தனர்.

அவர்கள் பேசியதாவது:

தி.மு.க., 155வது வார்டு, ராஜு: ராமாபுரம் கே.பி., நகரில் 1.5 ஆண்டுகளுக்கு முன் புயலில் சேதமடைந்த திறந்தவெளி இறகு பந்து மைதானத்தை, உள் அரங்கு மைதானமாக மாற்ற வேண்டும்.

தி.மு.க., 154வது வார்டு, செல்வகுமார்: குடிநீர், மின் வாரியத்தினர், உரிய அனுமதியின்றி சாலைகளில் பள்ளங்கள் தோண்டுகின்றனர். பின் மூடாததால், சாலைகள் மோசமாகி விடுகின்றன.

வரும் 2026ம் ஆண்டு தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், குடிநீர் வாரியம் தான் எங்களுக்கு பயமாக உள்ளது. ராமாபுரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை இரு மாதங்களாக கண்டுபிடிக்க முடியாமல், வாரியம் திணறுகிறது.

தி.மு.க., 152வது வார்டு, பாரதி: 'அம்மா' உணவகத்தில் விடுப்பு எடுத்து, அடுத்து பணிக்கு வரும்போது, விடுப்பு எடுத்த நாட்களுக்கும் சேர்ந்து வருகை பதிவேடில் கையெழுத்திடுகின்றனர்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் ஊழியர்களாக இருப்பதால், தி.மு.க., கவுன்சிலர் ஆய்வு செய்தால் அரசியலாக்கின்றனர். அவர்கள் திருடினாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, 'அம்மா' உணவகத்தை, அந்த உணவக தலைவிகள் வீட்டிற்கு மாற்றலாம்.

அதற்கு, அ.தி.மு.க., 145வது வார்டு சத்யநாதன்: ஒவ்வொரு மாதமும் 'அம்மா' உணவகம் பிரச்னையை கூறுகின்றனர். அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் தான் ஊழியர்கள் என்கின்றனர். தப்பு செய்தால் நடவடிக்கை எடுங்கள். அதை விட்டு ஏன் அ.தி.மு.க.,வை குறைகூறுகிறீர்கள்.

இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தி.மு.க., 150வது வார்டு, ஹேமலதா: குப்பை அகற்ற போதிய ஆட்கள் மற்றும் வானங்கள் இல்லாததால் தினமும் குப்பை சேர்கிறது. வானகரம் பிரதான சாலை, சமயபுரம் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. அச்சாலையை விரைந்து சீர் செய்ய வேண்டும்.

அ.ம.மு.க., 148வது வார்டு கிரிதரன்: நெற்குன்றம் பெரியார் நகர், மீனாட்சி நகரில் 1,600 வீடுகள் உள்ளன. இப்பகுதி நீர்நிலை புறம்போக்கு எனக்கூறி, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. அந்த இடம் குடிசை மாற்று வாரிய இடமாக மாற்றி, அரசு சார்பில் 80 சதவீதம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

வார்டில் புதிதாக குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதுடன், மழைநீர் வடிகால்வாயில் விடப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.

சத்யநாதன்: நெற்குன்றம் 145வது வார்டு ஆர்.ஜே.ஆர்., நகரில் யு.ஆர்.எஸ்., ஒப்பந்ததாரர் சார்பில் அமைக்கப்பட்ட சாலை, தரமாக அமைக்கவில்லை. சாலையை 6 அங்குலம் கனத்தில் சாலை அமைப்பதற்கு பதில், 4.5 அங்குலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கேட்டதால், பணிகளை 15 நாட்களாக ஒப்பந்ததாரர் நிறுத்தியுள்ளார்.

ஆறு மாதங்களுக்கு முன், நெற்குன்றத்தில் மேயர் ப்ரியா திறந்து வைத்த பூங்கா கட்டுமானங்கள் பெயர்ந்து விழுகின்றன. அந்த ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரவாயலில் வருவாய், ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

கூட்டம் துவங்கியதும், 151வது வார்டு கவுன்சிலர் சங்கர் கணேஷ், ''நாங்கள் கேட்கும் தகவல்களை தர உதவி பொறியாளர் மறுக்கிறார். அதுகுறித்து கேட்டால் மூன்றாம் நபருக்கு தர இயலாது என்கிறார்,'' என, தெரிவித்தார்.

இதற்கு மண்டலக்குழு தலைவர் ராஜன், ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எப்படி மூன்றாம் நபர் ஆவர்; அப்போது, முதல்வர், அமைச்சர், பிரதமர் ஆகியோர் மூன்றாம் நபரா' என, கேள்வி எழுப்பினர். இதனால், மண்டல கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us