/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மந்தைவெளியில் ரூ.151 கோடியில் அமைகிறது வணிக வளாகத்துடன் போக்குவரத்து முனையம் மந்தைவெளியில் ரூ.151 கோடியில் அமைகிறது வணிக வளாகத்துடன் போக்குவரத்து முனையம்
மந்தைவெளியில் ரூ.151 கோடியில் அமைகிறது வணிக வளாகத்துடன் போக்குவரத்து முனையம்
மந்தைவெளியில் ரூ.151 கோடியில் அமைகிறது வணிக வளாகத்துடன் போக்குவரத்து முனையம்
மந்தைவெளியில் ரூ.151 கோடியில் அமைகிறது வணிக வளாகத்துடன் போக்குவரத்து முனையம்
ADDED : ஜூன் 13, 2025 12:20 AM

சென்னை, மந்தைவெளி பேருந்து நிலையத்தில், 151 கோடி ரூபாயில், இரண்டு வணிக வளாகங்கள் கொண்ட, ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அமைக்க உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகமும் இணைந்து, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சிறப்பு நிறுவனம், 151 கோடி ரூபாயில், மந்தைவெளி பஸ் நிலையத்தில், வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்தை, அமைக்க ஒப்பந்தம் கோரியுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மாதவரம் - சிறுசேரி தடத்தில், மந்தவெளியில் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கிறது.
அருகில் பஸ் நிலையமும் இருப்பதால், மெட்ரோ நிலையத்தின் நுழைவு, வெளியேறும் கட்டமைப்புகள், தற்போதைய மந்தைவெளி பஸ் நிலையம் மற்றும் பணிமனை வளாகத்துக்குள் அமைக்கும் வகையில், ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மந்தைவெளியில் மெட்ரோ ரயில், பேருந்து போக்குவரத்தை ஒருங்கிணைத்து, 29,385 சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த முனையம் அமைக்கப்பட உள்ளது.
இரண்டு கட்டடங்களின் மாடிகளிலும், சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி சாதனங்கள் அமைக்கப்படும். இதன் வாயிலாக, கட்டிடத்தின் நிலைத்தன்மை மற்றும் பசுமை கட்டிட தரநிலைகளை பின்பற்ற முடியும்.
இத்திட்டம் சென்னையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டை நோக்கிய ஒரு முக்கிய படியாகும்.
ராமகிருஷ்ண மடம் சாலை மற்றும் அதனுடன் உள்ள இணைப்பு சாலைகளில் இருந்து, இருமுக சாலை அணுகுமுறையை பெறும் வகையில் அமைக்கப்படுகின்றன.
முதல் கட்டடத்தின் இரண்டு கீழ் தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடத்தில், 184க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், 96 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
இரண்டாவது கட்டடத்தில், இரு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம், 318 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.
தரைத்தளத்தில் இருந்து ஏழாவது தளங்கள் வரை வணிக, அலுவலக இடங்கள், சில்லறை விற்பனை இடங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் பெருநிறுவன அலுவலகங்கள், வரவேற்பு, ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமைய உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***