/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அனுமதித்தது 245; இருப்பதோ 2,500 கடைகள் அத்துமீறல் பெசன்ட் நகரில் புற்றீசல் போல் அதிகரிப்பு அனுமதித்தது 245; இருப்பதோ 2,500 கடைகள் அத்துமீறல் பெசன்ட் நகரில் புற்றீசல் போல் அதிகரிப்பு
அனுமதித்தது 245; இருப்பதோ 2,500 கடைகள் அத்துமீறல் பெசன்ட் நகரில் புற்றீசல் போல் அதிகரிப்பு
அனுமதித்தது 245; இருப்பதோ 2,500 கடைகள் அத்துமீறல் பெசன்ட் நகரில் புற்றீசல் போல் அதிகரிப்பு
அனுமதித்தது 245; இருப்பதோ 2,500 கடைகள் அத்துமீறல் பெசன்ட் நகரில் புற்றீசல் போல் அதிகரிப்பு
ADDED : மார் 23, 2025 12:21 AM

சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், 2013ல் 245 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கவுன்சிலர்களின் தாராள ஆதரவு காரணமாக பல மடங்கு அதிகரித்து, 2,500க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை அகற்ற முடியாமல், மாநகராட்சி அதிகாரிகள் திணறுகின்றனர்.
சென்னையில், மெரினா கடற்கரைக்கு அடுத்து, அதிக மக்கள் கூடுமிடமாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி, வேளாங்கண்ணி மேரி சர்ச், அஷ்டலட்சுமி கோவில் மற்றும் அறுபடை வீடு முருகன் கோவில்கள் உள்ளன.
இங்கு அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி, பெருங்குடி பகுதியினர், தினமும் நடைபயிற்சிக்காகவும், பொழுதுபோக்கவும் வருகின்றனர். வார விடுமுறை தினங்களில், மற்ற பகுதிகளைச் சேர்ந்தோரும் அதிகளவில் வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகளவில் வரும் இக்கடற்கரையில், ஏராளமான கடைகள் காணப்படுகின்றன. பெசன்ட்நகர் கடற்கரை மணல் பரப்பில் அமைக்கப்பட்ட கடைகள் குறித்து, 2013ம் ஆண்டு, மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 245 கடைகள் இருப்பது தெரிந்தது. மேலும், ஆல்காட்குப்பம், ஊரூர் குப்பம், ஓடைக்குப்பம் பகுதிகளைச் சேர்ந்தோர், இங்கு கடைகள் நடத்தியதும் தெரியவந்தது.
அதேபோல், 2021ல், மாநகராட்சி நியமித்த ஆர்.இ.பி.எல்., என்ற ஒப்பந்த நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. இதில், 645 கடைகள் இருப்பது தெரிந்தது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், மாநகராட்சி எடுத்த கணக்குபடி, 1,100 கடைகள் இருந்தன. தற்போது 2,500க்கும் மேற்பட்ட கடைகள் புற்றீசல் போல் முளைத்துள்ளன.
ஐந்து ஆண்டுளுக்கு முன், சாலையில் இருந்து பார்த்தால், மணல்பரப்பு, கடல் நீர் கண்ணுக்கு தெரியும். தற்போது, கண்ணுக்கு எட்டும் துாரம் வரை கடைகளாகவே தெரிகின்றன.
கடற்கரையில் கடை அமைப்பது தொடர்பாக, 2015ல், பல துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, 6 அடி வீதம் கடைகள் ஒதுக்கப்படும்; சாலையில் இருந்து கடற்கரை செல்ல மணல் பரப்பில் 40 அடி வீதம் இடைவெளி விட்டு, இருபுறமும் கடைகள் நடத்த வேண்டும். ஐந்து வரிசைகள் மட்டுமே அமைக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.
மீன் மற்றும் பலகாரக் கடைகளில், நான்கு நாற்காலிகள் போட வேண்டும். ஒதுக்கப்பட்ட நபர்கள் தான் கடை நடத்த வேண்டும். மறுவாடகைக்கு விட்டால் கடை காலி செய்யப்படும். இரவு நேரத்தில் முட்டை போட வரும் ஆமைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
ஆனால், அந்த விதிமுறை அனைத்தும் மீறப்பட்டு, கடை பரப்பு தற்போது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கடையிலும், 20 நாற்காலிகளுக்கு மேல் போடப்பட்டுள்ளன.
பாதையை ஆக்கிரமித்து கடை நடத்துவதால் குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர், மணலில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதுகுறித்து கேட்டால், கடைகாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
கவுன்சிலர்களின் ஆதரவு இருக்கிறது என்பதற்காக, அதிகளவில் கடைகளை அமைக்க அனுமதிப்பதால், பொழுதுபோக்க செல்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது.
உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் கடைகள் நடத்தப்படுவதால், அவற்றை அகற்ற முடியாமல், மாநகராட்சி அதிகாரிகள் திணறுகின்றனர்.
அனுமதியில்லாமல் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மெரினா கடற்கரைக்கு அனுமதி வாங்கிய 'ஸ்மார்ட்' கடைகளை, பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்க முடிவு செய்தோம். பல்வேறு அரசியல் தலையீட்டால், அதை இங்கு அமைக்க முடியவில்லை.
அனுமதி வழங்கிய கடைகள் மட்டும் நடத்தினால், அழகு குலையாமல் கடற்கரை இருக்கும். நாங்கள் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். எங்களுக்கு முழு சுதந்திரம் இல்லாததால், எதுவும் செய்ய முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.