Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேளச்சேரி மேம்பாலத்தில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா? ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை

வேளச்சேரி மேம்பாலத்தில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா? ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை

வேளச்சேரி மேம்பாலத்தில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா? ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை

வேளச்சேரி மேம்பாலத்தில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா? ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை

ADDED : ஜூன் 09, 2024 12:53 AM


Google News
வேளச்சேரி:தாம்பரம், செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுதா, 30. கணவர் கார்த்திக், 33. இருவரும் ஐ.டி., ஊழியர்கள். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

தம்பதி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கார்த்திக், விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதில், சுதாவுக்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன், நன்மங்கலத்தில் உள்ள கார்த்திக் வீட்டுக்கு சென்று சுதா பேச்சு நடத்தி உள்ளார். இதற்கு, கார்த்திக் 'நீதிமன்றம் வழியாக தீர்வு காணலாம்' என பேசியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த சுதா, நேற்று முன்தினம் மாலை வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலத்தில், தரமணி - நுாறடி சாலை வழித்தடம் மைய பகுதிக்கு, யமஹா இருசக்கர வாகனத்தில் சென்றார். மொபைல் போன், செருப்பு ஆகியவற்றை வாகனத்தில் வைத்துவிட்டு, மேம்பாலத்தில் இருந்து 40 அடி கீழே குதித்தார். அங்கிருந்தவர்கள், சுதாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சுதா இறந்தார். சுதாவின் தந்தை தாமோதரன் அளித்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னையிலேயே முதல் முறையாக, வேளச்சேரியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது அடுக்கு மேம்பாலத்தில், வாகனங்கள் குறைந்த எண்ணிக்கையில் செல்லும். மைய பகுதி வளைவின் ஓரம் அகலமாக உள்ளது. பாலம் உயரமாக இருப்பதால், வாகனங்களை ஓரமாக நிறுத்தவிட்டு, நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகம்.

இந்த பகுதியில் வேடிக்கை பார்க்க வந்த தம்பதி, காதலர்கள் சண்டை போட்டு, இதர வாகன ஓட்டிகள் சமாதானம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.

அடையாறு, கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ததை தொடர்ந்து, அங்கு உயரமான வேலி அமைக்கப்பட்டது. அதுபோல், வேளச்சேரி மேம்பாலம் மைய பகுதியில் உயரமாக தடுப்பு அமைக்க, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us