/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வெள்ளத்திற்கு பயந்து வெளியேறும் மக்கள் காலியாகும் வேளச்சேரி! தாழ்வான பகுதிகளில் வெறிச்சோடிய வீடுகள் வெள்ளத்திற்கு பயந்து வெளியேறும் மக்கள் காலியாகும் வேளச்சேரி! தாழ்வான பகுதிகளில் வெறிச்சோடிய வீடுகள்
வெள்ளத்திற்கு பயந்து வெளியேறும் மக்கள் காலியாகும் வேளச்சேரி! தாழ்வான பகுதிகளில் வெறிச்சோடிய வீடுகள்
வெள்ளத்திற்கு பயந்து வெளியேறும் மக்கள் காலியாகும் வேளச்சேரி! தாழ்வான பகுதிகளில் வெறிச்சோடிய வீடுகள்
வெள்ளத்திற்கு பயந்து வெளியேறும் மக்கள் காலியாகும் வேளச்சேரி! தாழ்வான பகுதிகளில் வெறிச்சோடிய வீடுகள்
ADDED : ஜூலை 03, 2024 11:54 PM

வேளச்சேரி வடகிழக்கு பருவமழை வெள்ளத்திற்கு பயந்து, வேளச்சேரியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வாடகை குடியிருப்புகளை பெரும்பாலானோர் காலி செய்து வெளியேறி வருகின்றனர். அப்பகுதிகளில் சொந்த வீட்டில் குடியிருப்போர் இந்த ஆண்டிலாவது மழை வெள்ளப் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த இப்போதிருந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏக்கத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
சென்னையில் பருவமழையின் போது பாதிக்கும் இடங்களில், முக்கிய பகுதியாக வேளச்சேரி உள்ளது. மழைக்காலத்தில் வேளச்சேரி, வெள்ளச்சேரியாக மாறிவிடுவது வழக்கம்.
சதுப்பு நிலத்தை ஒட்டிய தாழ்வான பகுதியானதால், 175, 176, 177 ஆகிய வார்டுகளில், குறைந்தது மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்கு வெளியே வர முடியாதபடி வெள்ளம் தேங்கி நிற்கும்.
பாதிப்பு
கடந்த 1985, 2002, 2005, 2015, 2016 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, வீட்டில் இருந்து வெளியேற முடியாத குடியிருப்புவாசிகள், படகு வாயிலாக மீட்கப்பட்டனர்.
கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை, வெள்ள பாதிப்பை நேரடியாக பார்வையிட்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிடுவது ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், அடுத்த பருவமழைக்கு முன், வெள்ள பாதிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்' என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்படும். ஆனால், ஆண்டுகள் பல கடந்தும், இதுவரை தீர்வு எட்டவில்லை. இதனால், 'வேளச்சேரி அல்ல; வெள்ளச்சேரி' என கூறப்படும் நிலையில் உள்ளது.
வெள்ளப் பாதிப்பு தடுக்க, இங்குள்ள 100க்கும் மேற்பட்ட தெருக்களில் வடிகால்கள், வேளச்சேரி உபரிநீர் கால்வாய், வீராங்கால் கால்வாய் மற்றும் பகிங்ஹாம் கால்வாயை இணைக்கும் மூடு கால்வாய் கட்டியும், பிரச்னை தீராமல் ஆண்டுதோறும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாண்டு, மழைக்காலம் வரை காத்திருந்து வெள்ள பாதிப்பில் சிக்கிக் கொள்ளாமல், வரும் முன் காப்போம் என, இப்போதே பெரும்பாலானோர் முன்னெச்சரிக்கையாக வீடுகளை காலி செய்து வெளியேற துவங்கிவிட்டனர்.
குறிப்பாக, 176வது வார்டைச் சேர்ந்த, ராம் நகர், விஜய நகர், பத்மாவதி நகர், ஸ்ரீனிவாசா நகர், முருகு நகர், ஏ.ஜி.எஸ்.காலனி, கல்கி நகரில் வசிக்கும் மக்கள், வெள்ள பாதிப்புக்கு பயந்து வெளியேறியுள்ளனர்.
இவர்கள் சற்று மேடான பகுதிகளாக உள்ள ஆதம்பாக்கம் மகாலட்சுமி நகர், இ.பி.காலனி, அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
சிரமம்
அதேபோல், 177வது வார்டில் உள்ள டான்சி நகர், அன்னை இந்திரா நகர், வி.ஜி.பி., அவென்யூ, புவனேஷ்வரி நகர், ஷேஷாத்ரி நகர், உதயம் நகர், வீனஸ் காலனி மக்கள், தண்டீஸ்வரம் நகர், சீதாபதிநகர், பிராமின் தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இன்னும் சிலர், வெள்ள பாதிப்பு ஏற்படாத பகுதிகளை தேடி விசாரித்து வருகின்றனர்.
வேளச்சேரியில் அடுத்தடுத்து பல வீடுகள் காலியாகி வருவதால், வங்கி கடன் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கியுள்ளதாக உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.
இது குறித்து, அன்னை இந்திரா நகர் நலச்சங்க நிர்வாகி எஸ்.குமாரராஜா, 64, கூறியதாவது:
கடந்த 2005, 2015, 2023ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில், தரைதளத்தில் வசித்தோரின் வீடுகளில், அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் சேதமடைந்தன. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கட்டமைப்பு மேம்படாததால், வரும் பருவமழைக்கும் அதேபோன்ற பாதிப்பு ஏற்படும் என அச்சப்பட்டு, அவர்கள் வெளியேறி வருகின்றனர்.
சில வீடுகளில் இருந்து, உரிமையாளர்கள்கூட வெளியேறுகின்றனர். இதனால் வாடகை கணிசமாக குறைந்துள்ளது. அதை நம்பி, வங்கி கடன், பிள்ளைகள் படிப்பு, திருமணம் என, பணத்தேவையில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர்.
வேளச்சேரி அபார வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தாலும் வெள்ள பாதிப்பு, பொருளாதார ரீதியில் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேளச்சேரி ஏரியை ஆழப்படுத்தி, சதுப்பு நிலத்தின் நீரோட்டத்தை அதிகரித்தால், பருவமழையின்போது வீடுகளில் அச்சமில்லாமல் வசிப்பர். இதற்கு ஏற்ப, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடுகள் வாங்க தயக்கம்
ரியல் எஸ்டேட் மந்தம்
தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
சென்னையின் பிற பகுதிகளைவிட வேகமாக வளர்ந்து வந்த வேளச்சேரியில் வீடு வாங்க வேண்டும், வாடகைக்காவது குடியேற வேண்டும் என மக்கள் விரும்பிய காலம், தற்போது மாறிவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் வேளச்சேரியில் வீடு வாங்கிய பலரும், அதில் தற்போது குடியிருக்கவில்லை.
இந்த வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு இடத்தில் வசிக்கின்றனர். வாடகைக்கு வந்தவர்களும் வெள்ளப் பாதிப்பால் வெளியேறுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, தனி வீடுகள், தரைதள வீடுகளில் வாடகைக்கு குடியிருக்க யாரும் முன் வருவதில்லை. இதனால், இது போன்ற வீடுகள் பல மாதங்களாக காலியாக இருக்கின்றன. இது போன்ற தாழ்வான இடங்களில் கட்டப்பட்ட பழைய வீடுகளை வாங்குவதற்கும் மக்கள் தயங்குகின்றனர்.
முறையாக கார் நிறுத்தும் இடத்துடன் முதல் தளம் அல்லது அதற்கு மேல் வீடு இருந்தால் மட்டுமே வாடகைக்கு ஆட்கள் வருகின்றனர். வெள்ள பாதிப்பு தொடர்பான மக்களின் அச்சத்தால், ரியல் எஸ்டேட் வர்த்தகமும் தொய்வடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
குடியிருப்போருக்கு அச்சம்
மழைக்காலத்தில் மின்சார சப்ளைக்கு உத்தரவாதம் இல்லை. நிலவரம் அறிந்தவர்களும், ஏற்கனவே பாதிப்பை சந்தித்தவர்களும் மீண்டும் அப்பகுதியில் குடியிருக்க விரும்புவதில்லை. பள்ளி, வேலைபார்க்கும் இடம் அருகில் இருப்பதால், புதிய நபர்கள் வாடகைக்கு வருகின்றனர். ஆனால், மழைக்கால பாதிப்பால் மாற்று இடத்தை தேடுகின்றனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்கள் யாரும் குடியிருக்க முன் வராததால் வீடுகள் காலியாக உள்ளன.
- எஸ்.ராஜசேகர், 45, வீடு இடைதரகர், வேளச்சேரி.