/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் மோசடி பா.ஜ., மாவட்ட செயலர் கைது பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் மோசடி பா.ஜ., மாவட்ட செயலர் கைது
பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் மோசடி பா.ஜ., மாவட்ட செயலர் கைது
பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் மோசடி பா.ஜ., மாவட்ட செயலர் கைது
பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் மோசடி பா.ஜ., மாவட்ட செயலர் கைது
ADDED : ஜூலை 04, 2024 12:14 AM

ஆர்.கே.நகர், ரயில் நடைமேடை கடை வாங்கித் தருவதாக பெண்ணிடம், 2.50 லட்சம் ரூபாய் மோசடி செய்து, தற்கொலைக்கு துாண்டியதாக, பா.ஜ., நிர்வாகி செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
சென்னை, தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் நவமணி, 45. இவருக்கு பா.ஜ., மகளிர் அணியில் உறுப்பினராக உள்ள சுமதி என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் நடைபாதை மேடையில் கடை வைத்துள்ளதாகவும், 2 லட்சம் ரூபாய் கட்டினால், இதேபோல இன்னொரு கடை வாங்கலாம் என்றும், நவமணியிடம், சுமதி கூறியுள்ளார்.
அவர் வழிகாட்டுதலின்படி, ரயில்வே நிலைய நடைமேடையில் கடை வைக்க அனுமதி வாங்கித் தருமாறு, பா.ஜ., வடசென்னை மாவட்ட பொதுச்செயலராக பொறுப்பு வகிக்கும் தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த செந்தில்குமார், 52 என்பவரை, சுமதியுடன் சென்று நவமணி அணுகியுள்ளார்.
இதற்கான தொகை பேசி முடிக்கப்பட்டு, கடந்த 2022ல், 2.5 லட்ச ரூபாயை செந்தில்குமாரிடம், நவமணி கொடுத்துள்ளார்.
கொரட்டூர் ரயில் நிலையத்தில் கடை அமைக்க செந்தில்குமார் அனுமதி வாங்கிக் கொடுத்தார். ஆனால், இரண்டே மாதங்களில் கடைக்கான அனுமதி காலாவதியானதாகக் கூறி, நவமணியை காலி செய்யும் படி, ரயில் நிலைய அதிகாரிகள் கூறினர்.
நவமணி இதுகுறித்து செந்தில்குமாரிடம் முறையிட்ட போது, அவர் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து ஏப்ரல், 29ம் தேதி, சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் நவமணி புகார் அளித்தார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணையின் போது, நவமணியிடம் பணம் வாங்கவில்லை என, செந்தில்குமார் மறுத்துள்ளாார்.
இதையடுத்து நவமணியின் புகார், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையருக்கு மாற்றப்பட்டது.
தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் கீதா, இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, நவமணிக்கு 2.5 லட்ச ரூபாய் கொடுக்க முடியாது; 1 லட்ச ரூபாயை மூன்று தவணையில் தருவதாக, செந்தில்குமார் கூறியுள்ளார். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. பின், செந்தில்குமாரிடம், அவர் ஒப்புக்கொண்ட பணத்தையாவது கொடுக்கும்படி கேட்ட போது, நவமணியை திட்டி, மிரட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலடைந்த நவமணி, 'ரயில்வே நடைமேடை கடை வாங்கித் தருவதாகக் கூறி, பா.ஜ., வடசென்னை மாவட்ட பொதுச்செயலர் செந்தில், 2.5 லட்ச ரூபாய் வாங்கி ஏமாற்றினார்.
பணத்தை திருப்பிக் கேட்ட போது, ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுக்கிறார்' என, இரண்டு பக்கம் கடிதம் எழுதியபின், நேற்று முன்தினம் வீட்டில் துாக்க மாத்திரை அதிகம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் நவமணியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பா.ஜ., நிர்வாகி செந்தில்குமாரை நேற்று கைது செய்தனர்.