/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கூவம் ஆற்றில் கட்டட கழிவுகளை அகற்ற… கெடு! மழை பாதிப்பை எதிர்கொள்ள உத்தரவு கூவம் ஆற்றில் கட்டட கழிவுகளை அகற்ற… கெடு! மழை பாதிப்பை எதிர்கொள்ள உத்தரவு
கூவம் ஆற்றில் கட்டட கழிவுகளை அகற்ற… கெடு! மழை பாதிப்பை எதிர்கொள்ள உத்தரவு
கூவம் ஆற்றில் கட்டட கழிவுகளை அகற்ற… கெடு! மழை பாதிப்பை எதிர்கொள்ள உத்தரவு
கூவம் ஆற்றில் கட்டட கழிவுகளை அகற்ற… கெடு! மழை பாதிப்பை எதிர்கொள்ள உத்தரவு
ADDED : ஜூலை 29, 2024 11:40 PM

சென்னை, ''கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளை, செப்., 30க்குள் அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசியதாவது:
மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் உள்ளது. மக்களுக்கான திட்டங்களை விரைந்து செய்ய வேண்டும்.
இது, கண்டிப்பதற்கும், தண்டிப்பதற்குமான கூட்டம் இல்லை. எவ்வளவு அறிவுறுத்தினாலும், சரியாக பணி செய்யாமல், நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம்.
குடிநீர் வினியோகம், துாய்மை பணிகளை தினசரி கண்காணிப்பதுடன், மழை காலத்திற்கு முன் நீர்நிலைகளை துார்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும். பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருத்தல் அவசியம்.
மழைநீர் வடிகால்களில் அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்வதுடன், விடுபட்டுள்ள பகுதிகளில் வடிகால்களை கட்ட வேண்டும். பழுதடைந்த சாலைகள் அனைத்தையும் சீர் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றி, பாதுகாப்பு முன்னேற்பாடு செய்வது முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சாலைக்கு ரூ.282 கோடி
தொடர்ந்து, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்று, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
பின், அமைச்சர் நேரு அளித்த பேட்டி:
நீர்நிலைகளில் காணப்படும் ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்றி, துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்து, இம்மாதத்திற்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரவாயல் - துறைமுகம் இடையே அமைக்கப்படும் ஈரடுக்கு மேம்பால பணிக்காக, கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கழிவு செப்டம்பர் மாதத்திற்குள் அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
கழிவுநீர் கட்டமைப்புகள், கழிப்பறைகள் பழுதடைந்த தெரு மின்விளக்குகளை மாற்றியமைத்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.
ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதிகளில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கணேசபுரம் சுரங்கப்பாதை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு ரயில்வே நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாக, மழைநீரை வெளியேற்றுவதற்கு சிரமம் உள்ளது. மீதமுள்ள அனைத்து சுரங்கப்பாதையிலும், மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் புதிய சாலைகள் அமைக்க, 282 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
20 செ.மீ., மழைக்கு
தண்ணீர் தேங்காது
சென்னை மாநகராட்சியில், மழைநீர் வடிகால் துார்வாரும் பணி 95 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இன்னும், 15 நாட்களில் முழுமையாக முடிவடையும். கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், 70 - 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது, 20 செ.மீ., மழை பெய்தால், அவற்றை வெளியேற்றும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத வகையில், 40 முதல் 50 செ.மீ., மழை பெய்தால், நீர் தேங்கி ஓரிரு நாளில் வடிந்துவிடும். அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ள, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- கே.என்.நேரு,
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்