Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரம் கமிஷனர் கையெழுத்தை போலியாக தயாரித்து மின் இணைப்பு

தாம்பரம் கமிஷனர் கையெழுத்தை போலியாக தயாரித்து மின் இணைப்பு

தாம்பரம் கமிஷனர் கையெழுத்தை போலியாக தயாரித்து மின் இணைப்பு

தாம்பரம் கமிஷனர் கையெழுத்தை போலியாக தயாரித்து மின் இணைப்பு

ADDED : ஜூலை 30, 2024 12:25 AM


Google News
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில் முன்னாள் கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டு, முடிவு சான்று தயாரித்து, மூன்று மாடி அடுக்குமாடி குடியிருப்பிற்கு மின் இணைப்பு பெறப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பதவி வகித்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அழகுமீனா, சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். தற்போது, தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பாலச்சந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநகராட்சியில், புதிதாக கட்டடம் கட்ட போதிய ஆவணங்களுடன் ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தையும், கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தையும் நகரமைப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து, முறையாக இருந்தால் அனுமதி வழங்குவர்.

மாநகராட்சியில் அனுமதி பெறும் போது, சமர்ப்பிக்கப்பட்ட வரைப்படத்தின் படியே கட்டடம் கட்ட வேண்டும். அப்படி கட்டப்படும் கட்டடங்களுக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் போது, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, இணைப்பு வழங்குவர்.

பல்லாவரம், பிள்ளையார் கோவில் தெருவில், ஏ.கே., பில்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், சேலையூர், 46வது வார்டு, புத்தர் தெருவில் மூன்று மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி, 2023ல் விற்பனை செய்துள்ளது.

இந்த குடியிருப்புக்கு மின்மாற்றி பொருத்தி, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த குடியிருப்புக்கு எதிரே வசிக்கும் கோபால் என்பவர், அடுக்குமாடி குடியிருப்புக்கு எவ்வாறு மின்சாரம் வழங்கப்பட்டது என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சேலையூர் மின் வாரிய அலுவலகத்தில் விளக்கம் கேட்டுள்ளார்.

அதற்கு, மாநகராட்சி சார்பில் முடிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இணைப்பு வழங்கப்பட்டதாக, மின் வாரியம் விளக்கம் அளித்ததோடு, முடிவு சான்றிதழின் நகலையும் இணைத்து அனுப்பியுள்ளது.

இதையடுத்து, கட்டட வரைப்படத்தின் படி, அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டவில்லை. அப்படியிருக்கையில், மாநகராட்சி சார்பில் எப்படி முடிவு சான்றிதழ் வழங்கப்பட்டது என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மாநகராட்சியில், கோபால் மீண்டும் விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது தான், தாம்பரம் மாநகராட்சியின், முன்னாள் கமிஷனர் அழகுமீனா கையெழுத்தை போலியாக போட்டு, முடிவு சான்றிதழ் தயாரித்து வழங்கியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, தன் கையெழுத்தை போலியாக போட்டு கட்டட நிறுவனம் முடிவு சான்றிதழ் தயாரித்துள்ளதாக, சேலையூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.கே., பில்டர் என்ற நிறுவனம், 2023ல் மூன்று மாடி கட்டடத்தை கட்டியுள்ளது. அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜீ மற்றும் குமார், மின் இணைப்புக்கு பெறுவதற்காக முடிவு சான்றிதழ் அளித்துள்ளனர். அதில், அப்போதைய கமிஷனராக இருந்த அழகுமீனாவின் கையெழுத்து போலியாக இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக முன்னாள் கமிஷனர் அழகுமீனா, சேலையூர் காவல் நிலையத்தில், இரண்டு வாரங்களுக்கு முன் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பின், போலி கையெழுத்து யார் மூலமாக தயார் செய்யப்பட்டது என்பதும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதும் தெரியவரும்.

- சிவகுமார்,

நகர திட்டமிடுனர், தாம்பரம் மாநகராட்சி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us