Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குடிநீரின் தரம் உறுதி செய்ய வாரியம் அழைப்பு வீட்டுக்கு வந்து பரிசோதனை செய்ய ஏற்பாடு

குடிநீரின் தரம் உறுதி செய்ய வாரியம் அழைப்பு வீட்டுக்கு வந்து பரிசோதனை செய்ய ஏற்பாடு

குடிநீரின் தரம் உறுதி செய்ய வாரியம் அழைப்பு வீட்டுக்கு வந்து பரிசோதனை செய்ய ஏற்பாடு

குடிநீரின் தரம் உறுதி செய்ய வாரியம் அழைப்பு வீட்டுக்கு வந்து பரிசோதனை செய்ய ஏற்பாடு

ADDED : ஜூலை 03, 2024 12:18 AM


Google News
சென்னை, சென்னை குடிநீர் வாரியத்தில், 13.35 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும் 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

மொத்தம் 5,700 கி.மீ., துாரத்தில் குடிநீர் குழாயும், 5,500 கி.மீ., துாரத்தில் கழிவுநீர் குழாயும் பதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப குழாயின் கொள்ளளவை அதிகரிக்கவில்லை. இதனால், கொள்ளளவை மீறி செல்லும் குடிநீர், கழிவுநீரால் குழாய்கள் சேதமடைகின்றன.

வடிகால், கால்வாய், மெட்ரோ ரயில், மின்சாரம், தொலைதொடர்பு கேபிள் உள்ளிட்ட பணி மற்றும் சாலையில் பள்ளம் தோண்டும் போதும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் சேதமடைகின்றன.

இதனால், குடிநீரில் கழிவுநீர் கலப்பது, அதை பயன்படுத்துவோருக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், முறையாக சுத்திகரிக்காத மற்றும் நீண்டநாள் தேக்கி வைத்த குடிநீராலும் தொற்று பாதிக்க வாய்ப்புள்ளது.

கடந்த மாதம், பல பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு, துர்நாற்றம், கலங்கல் போன்ற பிரச்னை ஏற்பட்டது.

இதனால், குடிநீரை பயன்படுத்துவதில் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 'சந்தேகம் ஏற்படும் வகையில் குடிநீர் இருந்தால், பரிசோதித்து தரத்தை உறுதி செய்து பயன்படுத்தலாம்' என, வாரியம் கூறியது.

சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

ஒரு மண்டலத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில், 200 இடங்களில் குடிநீர் மாதிரி எடுத்து பரிசோதனை செய்கிறோம். குளோரின் அளவு, நிறம் மாறுதல், தாது கரைசல் போன்றவை குறித்து, கையடக்க கருவிகள் கொண்டு பரிசோதிக்கிறோம்.

இதிலும் சந்தேகம் இருந்தால், பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி தரம் உறுதி செய்யப்படும். குடிநீரை காய்ச்சி பருகுவது சிறந்தது. வழக்கத்தை விட குடிநீரில் நிறம் மாறுவது, துர்நாற்றம் வீசுவது, தரத்தில் சந்தேகம் இருந்தால், 044 - -4567 4567 அல்லது 1916 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், குடிநீர் வார்டு பொறியாளர்களை அணுகினால், வீட்டுக்கே வந்து குடிநீரை பரிசோதித்து முடிவு தெரிவிப்பர். குடிநீரில் மாசு இருந்தால், தேவைப்படும் தடுப்பு நடவடிக்கை உடனே எடுக்கப்படும்.

பொதுமக்கள் குடிநீர் தொட்டிகளை ஆண்டுக்கு இருமுறை சுத்தம் செய்ய வேண்டும். கழிவுநீர் சேம்பர்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

குடிநீர் மற்றும் கழிவுநீரை எப்படி கையாள வேண்டும் என, தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கான விழிப்புணர்வும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us