/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாதையை ஆக்கிரமித்து 'ஷோ' காட்டிய கட்சிகள் பந்தல் இருக்கு; குடிப்பதற்கு தண்ணீர் எங்கே? பாதையை ஆக்கிரமித்து 'ஷோ' காட்டிய கட்சிகள் பந்தல் இருக்கு; குடிப்பதற்கு தண்ணீர் எங்கே?
பாதையை ஆக்கிரமித்து 'ஷோ' காட்டிய கட்சிகள் பந்தல் இருக்கு; குடிப்பதற்கு தண்ணீர் எங்கே?
பாதையை ஆக்கிரமித்து 'ஷோ' காட்டிய கட்சிகள் பந்தல் இருக்கு; குடிப்பதற்கு தண்ணீர் எங்கே?
பாதையை ஆக்கிரமித்து 'ஷோ' காட்டிய கட்சிகள் பந்தல் இருக்கு; குடிப்பதற்கு தண்ணீர் எங்கே?
ADDED : ஜூன் 02, 2024 12:15 AM

சென்னை, நடைபாதையை ஆக்கிரமித்து அரசியல் கட்சியினர் வைத்த பந்தலில் தண்ணீர் இல்லாமல் இருப்பதால், அவற்றை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலில், சில மணி நேரம் இருந்தாலே உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இவற்றில் இருந்து மக்களை காக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் சாலை சிக்னல்களில், நிழற்பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
அதேபோல், அரசியல் கட்சினரும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைத்தனர்.
அப்பந்தல் அமைக்கப்படும்போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் பங்கேற்று, தண்ணீர் மற்றும் மோர் பந்தலுடன் பழங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி, விளம்பரம் தேடினர்.
அதைதொடர்ந்து, ஓரிரு நாட்கள் தண்ணீர் மட்டும் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அரசியல் கட்சியினரின் பெரும்பாலான தண்ணீர் பந்தலில் குடிநீர் இல்லை.
அதேநேரம், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட, பந்தல் மட்டுமே இருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
தி.மு.க., -- அ.தி.மு.க., - பா.ஜ., என, பல்வேறு அரசியல் கட்சிகள் விளம்பரத்திற்காக தண்ணீர் பந்தலை அமைத்தனர். அமைக்கப்பட்ட அன்று மட்டும் தான், அனைத்தும் நன்றாக இருந்தது. அதன்பின், சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை.
பல இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள பந்தல் மட்டுமே, கட்சி கொடியுடன் காணப்படுகிறது. அங்கு தாகத்தை தீர்க்க ஒன்றுமில்லை.
இவ்வாறு விளம்பரத்துக்காக அமைக்கப்பட்டு, நடைபாதையை ஆக்கிரமித்துள்ள தண்ணீர் பந்தல்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முன்வர வேண்டும். அரசியல் கட்சியினருக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால், சுகாதாரமாக குடிநீரை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.