/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இரண்டு நாள் மழைக்கே 'நாஸ்தி'யான தலைநகரம் இரண்டு நாள் மழைக்கே 'நாஸ்தி'யான தலைநகரம்
இரண்டு நாள் மழைக்கே 'நாஸ்தி'யான தலைநகரம்
இரண்டு நாள் மழைக்கே 'நாஸ்தி'யான தலைநகரம்
இரண்டு நாள் மழைக்கே 'நாஸ்தி'யான தலைநகரம்
ADDED : ஜூன் 06, 2024 12:26 AM

சென்னை, சென்னையில் நேற்று திடீரென பெய்த சிறிய மழைக்கே, பல பகுதிகள் சகதிக்காடாயின.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் வெப்பம் சுட்டெரித்த நிலையில், இரண்டு நாட்களாக அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்கிறது.
நேற்று முன் தினம் பெய்த மழையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், மாநகர பேருந்து சுரங்கப்பாலத்தில் சிக்கியது. அதை மீட்க போராடினர்.
நேற்று முன் தினம் மாலை திடீரென பலத்த காற்றுடன் அரை மணி நேரம் பெய்த மழையில், சென்னை, அண்ணாசாலையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்பட்டனர். மழைநீர் வடிகால்வாய்களில் மழை நீர் உள்வாங்கவில்லை.
மெத்தனம்
குடிநீர்வாரிய அதிகாரிகள் மெத்தனப்போக்கு காரணமாக பாதாள சாக்கடை திட்டப் பணிகளை முறைப்படி செய்யாததால் ஒரு நாள் பெய்தமழைக்கு மடிப்பாக்கத்தின் பல பகுதிகள் சகதிப்பாக்கமாக மாறியது. பல தெருக்களில் சாலை உள்வாங்கியது.
சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கத்தில் நான்கு ஆண்டுகளாக குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அதனுடன், 2021ம் ஆண்டு, 249 கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவக்கப்பட்டன. தற்போது, மடிப்பாக்கம்,187, 188வது வார்டுகளில் இத்திட்டத்திற்கான சாலைகள் தோண்டபட்டு, 'மேன்-ஹோல்' மற்றும் குழாய் பதிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒப்பந்ததாரர்கள் தங்களின் இஷ்டத்திற்கு பள்ளம் தோண்டி, தரமற்ற முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு நாள் பெய்த மழை காரணமாக மடிப்பாக்கதில் உள்ள பல்வேறு நகர்கள் சகதிக்காடாக மாறியுள்ளது. சில தெருக்களில் சாலைகள் உள்வாங்கியது, குடியிருப்பு வாசிகள் நடந்து செல்லவே முடியாத மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை செங்குன்றம் ஜி.என்.டி., சாலையின் இரு பக்கமும், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, 1.2 கி.மீ., நீளத்திற்கு, 17 கோடி ரூபாய் செலவில், 7 அடி அகலம், 7 அடி ஆழம் கொண்ட, புதிய மழைநீர் வடிகால் மற்றும் நடைபாதை அமைக்கும் பணி, கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கியது. ஓராண்டை கடந்தும் பணி முழுமையாக முடியவில்லை.
இந்த நிலையில், நேற்று முன் தினம் மாலையிலும், நேற்று மதியமும், 30 நிமிடம் மழை பெய்தது. ஆனால், மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அரைகுறையாக விடப்பட்டதால், செங்குன்றம் ஜி.என்.டி., சாலை- சோத்துப்பாக்கம் சாலை சந்திப்பு முதல், செங்குன்றம் அரிசி, காய்கறி மார்க்கெட் வரை, 1 கி.மீ., துாரத்திற்கு, ஜி.என்.டி., சாலையில், மழைநீர் 2 அடி தேங்கியது. அதனால், வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
மின்தடை
ஆவடியிலும், ஒரு மணி நேரம் நீடித்த மழையால், அங்குள்ள மாநகர பேருந்து நிலையத்தில், மழைநீருடன் கழிவுநீர் தேங்கியது. அதனால், ஆவடி, திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களுக்கு செல்லும் பயணியர் அவதிப்பட்டனர்.
செங்குன்றம், பாடியநல்லுார் சுற்றுவட்டாரத்தில், நேற்று முன் தினம், 2:55 மணி முதல், 3.35 மணி வரை பலத்த மழை பெய்தது. அதனால், 3:07 மணி அளவில் மின்சாரம் தடைபட்டது. மூன்று மணி நேரத்திற்கு பிறகே மின் வினியோகம் சீரானது. மீண்டும் இரவில் மின் தடை ஏற்பட்டது.
இப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட காந்திநகர் பகுதி மக்கள், 'நேற்று முன் தினம் இரவு, செங்குன்றம் காமராஜ் நகரில் உள்ள, மின் வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்தவர்கள் அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்து சேதப்படுத்தினர். இது குறித்து, மின் வாரியத்தினர் போலீசில் புகார் செய்யவில்லை.
மீண்டும் நேற்று மதியமும், 2:40 மணி அளவில் துவங்கிய மழை , 30 நிமிடம் பெய்தது. அப்போது தடை செய்யப்பட்ட மின் வினியோகம், மாலை, 4:05 மணி அளவில் சீரானது. பின், மாலை, 5:17 மணிக்கு மீண்டும் மின்தடை ஏற்பட்டது.
மழை துவங்கிய சில நிமிடங்களில், மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மழை ஓய்ந்தாலும், ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மின்தடை நீடிக்கிறது. இது குறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தால், புழல் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் இணைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சீரமைத்த பிறகுதான் மின்வினியோகம் சீராகும் என்றனர்.
பல ஆண்டாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என்றால், செங்குன்றத்தில் துணை மின் நிலையம் அமைப்பதே தீர்வு என்றும் அவர்கள் கூறினர்.