/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடிகால் பணி பாதியில் நிறுத்தம் வீடுகள் இடிந்து விழும் அபாயம் வடிகால் பணி பாதியில் நிறுத்தம் வீடுகள் இடிந்து விழும் அபாயம்
வடிகால் பணி பாதியில் நிறுத்தம் வீடுகள் இடிந்து விழும் அபாயம்
வடிகால் பணி பாதியில் நிறுத்தம் வீடுகள் இடிந்து விழும் அபாயம்
வடிகால் பணி பாதியில் நிறுத்தம் வீடுகள் இடிந்து விழும் அபாயம்
ADDED : ஜூலை 08, 2024 01:06 AM

துரைப்பாக்கம்:சோழிங்கநல்லுார் மண்டலம், 193, 195, 196 ஆகிய வார்டுகளில், 630 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள கால்வாய் மற்றும் வடிகால்கள், சதுப்பு நிலம் மற்றும் பகிங்ஹாம் கால்வாயை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளன.
பல தெருக்களில் வடிகால் இல்லாததால், கடந்த ஆண்டு பருவமழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது. மேலும், பழைய கால்வாய்களும் சேதமடைந்தன.
இதனால், 12 கி.மீ., துாரத்தில் வடிகால் கட்ட, 58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கவிதா கட்டுமான நிறுவனம் இப்பணியை துவங்கியது.
ஓராண்டுக்கு முன் துவங்கிய பணி, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனம் இடையே ஏற்பட்ட நிர்வாக சிக்கல் காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால், வடிகால் பணி நிறுத்தப்பட்ட இடங்களில் பல வீடுகள் மற்றும் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
பகுதி மக்கள் கூறியதாவது:
வடிகால் பணி, துவங்கிய வேகத்தில் நடந்திருந்தால் ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்திருக்கும். ஆனால், பல தெருக்களில் வடிகால் முழுமை பெறவில்லை.
குறிப்பாக, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் வடிகாலை இணைக்காமல் பல தெருக்கள் உள்ளன. அவ்வப்போது பெய்து வரும் மழைநீர், வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் தேங்கிஉள்ளது.
பணி நடக்காததால், வடிகால் பள்ளத்தில் மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் தண்ணீரால், அதை ஒட்டியுள்ள வீடுகள் மற்றும் சுற்றுச்சுவர் வலுவிழந்து, இடிந்து விழும் அபாயம் உள்ளது. நிறுத்தப்பட்ட பணியை விரைந்து துவங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மண்டல அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஒப்பந்த நிறுவனத்திடம் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி விட்டோம். காலஅவகாசத்தை காரணம் காட்டி, இந்த பணியை பாதியில் நிறுத்திவிட்டு, வேறு இடத்தில் புதிய பணி துவங்கி உள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளோம்' என்றனர்.